தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடைமுறைகளுக்கு தடை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடைமுறைகளுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 14 hours ago

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசுகள் விற்பனை செய்வதற்காக டெண்டர் கோரப்பட்டது. ஆனால், இந்த டெண்டருக்கு விண்ணப்பித்த சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கத்தினரின் டெண்டர் விண்ணப்பத்தை அரசு நிராகரித்துவிட்டது.

மேலும், தகுதியில்லாத சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் டெண்டர் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே, எந்த நேரத்திலும் சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்துக்கு டெண்டர் வழங்கப்படலாம் என்பதால், டெண்டர் நடைமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

இதுமட்டும் அல்லாது, சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கத்தின் சார்பில் கோரப்பட்ட டெண்டர் விண்ணப்பத்தை ஏற்க உத்தரவிட வேண்டும்" எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க:ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? - உயர் நீதிமன்ற கருத்து என்ன?

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், எந்த வித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், டெண்டர் குறித்து முறையாக எந்த அறிவிப்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இதனை அடுத்து, அரசே பட்டாசு கடைகளை அமைக்காமல் வெளி நபர்களுக்கு டெண்டர் அளித்து பட்டாசு விற்பனை செய்யப்படுவது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ஒவ்வொரு ஆண்டும் இந்த நடைமுறை தான் பின்பற்றப்படுவதாக கூறினார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி எம்.தண்டபாணி, தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட டெண்டர் நடைமுறைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details