குளிர்காலம் தொடங்கிவிட்டால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வருவதும் இயல்பு தான். ஆனால், இந்த பிரச்சனைகளில் இருந்து சுலபமாக விடுபட மருத்துவம் குணம் நிறைந்த மிளகு வைத்து செய்யக்கூடிய 'மிளகு குழம்பு' செய்து சாப்பிடுங்கள். தொண்டைக்கு இதமாகவும், குளிர்காலத்திற்கு காரசாரமாக இருக்கும் மிளகு குழம்பு எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பொடி தயார் செய்ய தேவையான பொருட்கள்:
- மிளகு - 1 1/2 டீஸ்பூன்
- சீரகம் - 3/4 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கைப்பிடி
குழம்பிற்கு தேவையான பொருட்கள்:
- நல்லெண்ணாய் - 3 டீஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 10 பல்
- மிளகு - 1/2 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
- கறிவேப்பிலை - 2 கொத்து
- பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- தக்காளி - 2
- மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
- மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
- புளி - 1 எலுமிச்சை அளவு
- உப்பு - தேவையான அளவு
மிளகு குழம்பு செய்முறை:
- முதலில், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும், மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்து வறுக்கவும். பின், கறிவேப்பிலை சேர்த்து வறுத்ததும், அடுப்பை அணைத்து இந்த கலவையை வேறு தட்டிற்கு மாற்றி வைக்கவும்.
- இப்போது, அதே கடாயில், நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக, பொடியாக நறுக்கி வைத்த இஞ்சி, தோல் உறித்த பூண்டு, மிளகு சேர்க்கவும்.
- பின்னர், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். சின்ன வெங்காயம் சிவந்து வந்ததும், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், அரைத்து வைத்த தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- இப்போது, மிளகாய்த்தூள், மல்லித் தூள், குழம்புக்கு தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின்னர், கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடுங்கள். (தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்).
- இதற்கிடையில், நாம் முன்னதாக வறுத்து வைத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து, கொதித்து கொண்டிருக்கும் குழம்பில் சேர்த்து, நன்கு கலந்து மூடி போட்டு 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள். இறுதியாக, அடுப்பை அணைப்பதற்கு முன்னால், சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், குளிர்காலத்திற்கு ஏற்ற மிளகு குழம்பு தயார்.
- வாரத்திற்கு ஒரு முறை வீட்டில் இந்த குழம்பு செய்து சாப்பிட்டு வர சளி, இருமல் போன்ற பிரச்சனை நீங்கும். அதுமட்டுமல்லாமல், சளி பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து இந்த குழம்பு சாப்பிட்டு வர பிரச்சனை நீங்கும்.
இதையும் படிங்க:
- காரசாரமான பூண்டு குழம்பு இப்படி செய்ங்க...ஒரு வாரமானாலும் கெடாமல் இருக்கும்!
- கிராமத்து ஸ்டைல் மொச்சை கருவாட்டு குழம்பு..இப்படி செஞ்சா சும்மா நறுக்குனு இருக்கும்!
- இட்லி,தோசை,சப்பாத்திக்கு அம்சமா இருக்கும் 'பூண்டு தொக்கு'..இப்படி செய்தால் 10 நாள் ஆனாலும் கெடாது!
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்