தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள ஶ்ரீ சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக, தமிழக முன்னாள் பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையிலிருந்து விமான மூலம், நேற்று-ஞாயிற்றுக்கிழமை (நவ.24) தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, “கடந்த மழை வெள்ளத்தில் ஆத்தூர் பாலம் சேதமடைந்தது. அவை தற்போது வரை சரி செய்யப்படவில்லை. மக்களுக்கான நல திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமா இருக்கும். திமுக ஆட்சியில், பள்ளி, மருத்துவமனை மற்றும் நீதிமன்ற வளாகம் என அனைத்து இடங்களிலும் கத்தி குத்து சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இதனை சட்டம் ஒழுங்கில் சேர்க்கக்கூடாது என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அப்படியென்றால் எவற்றை சட்டம் ஒழுங்கில் சேர்ப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். திராவிட கருத்துக்களை இளைஞர்களிடம் பதித்து மாவட்டம், மாவட்டமாக கலைஞருக்கு சிலை வைக்கின்றார்கள். சிலை வைப்பதற்கு பதிலாக மழைக்காலங்களில் மக்களை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.
அதானி ஊழல் குறித்து தமிழ்நாடு அரசும் பதில் சொல்ல வேண்டும். பெரும்பான்மையான இந்தியா கூட்டணிகள் ஆளப்படும் மாநில அரசுகளும் பதில் சொல்ல வேண்டும். திருச்செந்தூரில் யானை மிதித்து 2பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசு 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும். யானை தாக்கி பலியானால் ரூ.2 லட்சம் தான். தமிழகத்தில் அதிக நிதி பெற வேண்டும் என்றால் கள்ளச்சாரயம் அருந்தி உயிரிழந்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க: பல்வேறு பண்பாட்டுத் தாக்குதல் நடந்தாலும், தமிழ்நாடு என்றும் நிலைத்திருக்க காரணம் என்ன தெரியுமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன விளக்கம்!
யானைகளை அமைதிப்படுத்துவதற்கு முகாம் நடத்தப்பட வேண்டும். தொடர்ந்து யானைகளை மருத்துவரை வைத்து கண்காணித்து மனநலம் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும். ஆன்மீக எண்ணத்தை விட்டுவிட்டு யானையை பார்த்தால் பயமாக உள்ளது. மு.க. ஸ்டாலின் மற்றும் கனிமொழி கோயிலுக்கு செல்லாததால் இது பற்றி அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
ஜிஎஸ்டி மூலமாக தமிழகத்தில் இருந்து பெறக்கூடிய நிதி 36 ஆயிரம் கோடி. அது 37 ஆயிரம் கோடியாக திரும்ப தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சாலைகள் போடுவதற்கு மூன்று மடங்கு நிதி அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் நிதி மத்திய அரசு வழங்கியுள்ளது. ஊழல் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார். திமுக ஆட்சியில் 2ஜி ஊழல், காமன்வெல்த் போன்று பல உள்ளது. எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர் பிரதமர் மோடி” என்றார்.
விஜய் வைத்த விருந்து உண்மையா? ஷூட்டிங்கா ?: மேலும், நடிகர் விஜய் விவாசாயிகளை அழைத்து விருந்து வைத்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “நடிகர் விஜய் விவசாயிகளை உணவு விருந்து கொடுத்துள்ளார். இனி யாரையெல்லாம் கூப்பிடுகிறார் என்று பார்க்கலாம். விஜய் வைத்த விருந்து உண்மையா? ஷூட்டிங்கா என்பதை பொறுத்திருந்த பார்க்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்