சென்னை: சென்னை போயஸ் தோட்டத்தில் நளினா ராமலட்சுமி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் அஜய் குமார் லுனாவத் என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்களது வீட்டுக்கு வந்த நபர்கள், வீட்டை நடிகர் தனுஷ் வாங்கியுள்ளதால் உடனடியாக காலி செய்யக் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அஜய் குமார் லுனாவத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், 2024 ஜனவரி வரை ஒப்பந்தம் இருந்த நிலையில், காலி செய்ய மறுத்ததால் வீட்டின் மின் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், முறையாக வாடகை செலுத்தி வந்த நிலையில், எந்த முன்னறிவிப்பும் இன்றி காலி செய்யச் சொன்னது சட்ட விரோதம் என்பதால் வீட்டு விவகாரத்தில் தலையிட நடிகர் தனுஷ் உள்ளிட்டோருக்கு தடை விதிக்க வேண்டுமென கோரப்பட்டது.