சென்னை:பிரபல இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் இசை அமைத்த படங்கள் வெற்றி பெறாமல் போனாலும்கூட அவரது பாடல்கள் ஹிட் அடித்துவிடும். மேலும், சில படங்களின் வெற்றிக்கு இவரது பாடலும் முக்கிய காரணமாகவும் அமையும். ஆனால், தமிழ் சினிமாவில் ஹாரிஸ் ஜெயராஜின் என்ட்ரியை சமீப நாட்களாக பார்க்க முடியாமல் உள்ளது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹாரிஸ் ஜெயராஜுக்கு தொடர்புடைய வழக்கு ஒன்று நடந்து வருகிறது.
அதாவது, திரைப்படங்களுக்கு இசையமைத்து சேவை வழங்கியதாகக் கூறி, அதற்காக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜுக்கு, ஜி எஸ் டி இணை இயக்குனர் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நோட்டீசை எதிர்த்து ஹாரிஷ் ஜெயராஜ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனது படைப்புகள் முழுவதும் தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக பதிப்புரிமை வழங்கி விட்டதால், ஜிஎஸ்டி வரி விதிக்க முடியாது. எனவே, இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.