சென்னை: பெண் காவலர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், அவர் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதவிர, காரில் கஞ்சா வைத்திருந்தது உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில், சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விரைவாக விசாரிக்கக் கோரி அவரது வழக்கறிஞர் முறையீடு செய்தார்.