தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு; 2015-ம் ஆண்டு அரசாணையை ரத்து செய்து உத்தரவு! - Third gender reservation - THIRD GENDER RESERVATION

Transgender Quota: மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் உள் இடஒதுக்கீடு வழங்கி, கடந்த 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

Madras High Court
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 7:13 PM IST

சென்னை: சென்னையைச் சேர்ந்த திருநங்கை ரக்‌ஷிதா ராஜ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், கடந்த 2015ஆம் ஆண்டு தமிழக அரசு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என தெரிவித்திருந்தார்.

இதனால் தாழ்த்தப்பட்ட பிரிவில் பிறந்த திருநங்கைகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், கர்நாடக மாநிலத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு ஒரு சதவீத தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார். எனவே, கடந்த 2015ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜி.இளந்திரையன் முன்பு நடைபெற்றது. அப்போது, அரசுத் தரப்பில், பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த திருநங்கைகள் எஸ்சி எஸ்டி சான்றிதழ் வைத்திருந்தால், அந்தந்த சாதி என கருதப்படுவார்கள் என்று தெளிவுபடுத்தும் வகையில், கடந்த 2017ஆம் ஆண்டு மற்றொரு அரசு உத்தரவு உள்ளதாகவும், சான்றிதழ்கள் இல்லாத திருநங்கைகள் மட்டுமே எம்பிசி பிரிவின் கீழ் கருதப்படுவார்கள் என்றும், பெண்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பும் திருநங்கைகளும் 30 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பரிசீலனைக்கு தகுதியுடையவர்கள் என்றும் தெரிவித்தது.

பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.இளந்திரையன், கடந்த 2015ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளை மீறுவதாக உள்ளதாகக் கூறி, அந்த அரசு உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார். 12 வார காலத்திற்குள் அனைத்து சாதிக் குழுக்களிலும் உள்ள திருநங்கைகளுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:+2 தேர்வில் சாதனை புரிந்த திருநங்கை மாணவி நிவேதா... நேரில் அழைத்து பாராட்டிய கனிமொழி எம்.பி!

ABOUT THE AUTHOR

...view details