தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு விவகாரம்; மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து!

Mansoor Ali Khan: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து விவகாரம்
நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து விவகாரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 1:16 PM IST

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர அனுமதி கேட்டு, நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறி, மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, தனது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மன்சூர் அலிகான் தரப்பில், த்ரிஷா, குஷ்பு ஆகியோர் தமிழ்நாட்டில் இருக்கும் நிலையில், சிரஞ்சீவி மட்டும் ஆந்திராவில் இருப்பதால்தான் அவருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு மனுத் தாக்கல் செய்ததாகவும், ஆனால் வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், மற்ற இருவர் மீதான வழக்கையும் தொடர விரும்பவில்லை எனவும் மன்சூர் அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மன்சூர் அலிகானுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டனர். அதேநேரம், வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம்? தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details