சென்னை:ஐபிஎல் சூதாட்ட வழக்கில் தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறான கருத்துக்களை பரப்பியதாக, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன் உள்ளிட்டோருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
மேலும், ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இனிமேல் பத்திரிகைகளில் பேட்டி அளிக்கக்கூடாது என ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவுகளை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தனியார் தொலைக்காட்சி சார்பில், தங்களுக்கு எதிராகவும் இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதால், வழக்கில் தங்களை இணைத்து தோனி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தோனி தரப்பு வழக்கறிஞர், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கில் இணைத்து பதிலளிக்க கூறுவதை ஏற்கக்கூடாது. அது வழக்கு விசாரணையை பாதிக்கும். நேரடியாக ஜீ தொலைக்காட்சி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என தெரிவிக்கப்பட்டது.