சென்னை :கட்சி பெயர், கொடி பயன்படுத்தத் தடை கோரி, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் டி.கே.பஷீர் தொடர்ந்த வழக்கில், தமிமுன் அன்சாரி பதில் அளிக்க உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் டி.கே.பஷீர் அகமது தாக்கல் செய்துள்ள மனுவில், “எங்கள் கட்சி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தால் பதிவு பெற்ற கட்சியாக செயல்பட்டு வருகிறது. பொதுத் தேர்தல்களில் எங்கள் கட்சி குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளை பெற்றுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளராக எம்.தமிமுன் அன்சாரி பதவி வகித்து வந்தார். கட்சியில் உரிய முறையில் பங்களிப்பை வழங்காததால் அவர் கட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டார். கட்சியின் உட்கட்சி தேர்தல் நடத்தப்படவேண்டிய நேரத்தில் கரோனா பாதிப்பு வந்ததால், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 10ல் தேர்தல் நடத்தப்பட்டது. அதில், என்னை தலைவராகவும், சையத் மகபூ சுபானியை துணை தலைவராகவும் , பொதுச்செயலாளராக எஸ்.எஸ்.ஹாருண் ரசீத்தும், பொருளாளராக என்.ஏ.திமியாவும் தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தமிமுன் அன்சாரி தலைமையில், கட்சியின் செயற்குழு 2022 அக்டோபர் 8ஆம் தேதி கூட்டப்பட்டதாகவும், டிசம்பர் 24ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். அதில், பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டதாகவும், கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.