சென்னை:தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டிருந்தார். பிரபல ரவுடியான நாகேந்திரனின் மகனான அவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து, கடந்த செப்டம்பர் 19ம் தேதி சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அஸ்வத்தாமனின் தாய் விசாலாட்சி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மனதை செலுத்தாமல், இயந்திரத்தனமாக தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்தது குறித்து தனக்கோ, அவரது மனைவிக்கோ தெரிவிக்கவில்லை எனவும், உரிய காலத்தில் இந்த உத்தரவு மற்றும் ஆவணங்கள் அஸ்வத்தாமனிடம் உரிய நேரத்தில் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அதிமுகவுடன் கூட்டணியா? தவெக அளித்த விளக்கம் !..
பூந்தமல்லி கிளை சிறையில் அஸ்வத்தாமன் அடைக்கப்பட்டுள்ள நிலையில், புழல் சிறைக்கு இந்த உத்தரவை அனுப்பியது முறையற்றது எனவும், பொது அமைதிக்கு எந்த பங்கமும் விளைவிக்காத தனது மகன் அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அளித்த மனுவை, அறிவுரைக் கழகம் முறையாக பரிசீலிக்காமல் நிராகரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஆதாரங்களும் இல்லாமல், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பின்னணியாக இருந்தவர்களை திருப்திப்படுத்தும் நோக்கில், தேசிய கட்சியில் நிர்வாகியாக இருந்த தனது மகனின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், தனது மகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் எம். ஜோதிராமன் அடங்கிய அமர்வு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்