தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் 3வது பெரிய தேரான கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலின் சித்திரைத் தேரோட்டம் உற்சவம், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆர்வமாக தேரினை வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
இந்நிலையில், தேரடியில் இருந்து புறப்பட்ட தேர் சாரங்கபாணி கீழ வீதியைக் கடந்து, தெற்கு வீதியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலைக் கடந்து வரும் போது, தேரின் முன்பகுதியில் உள்ள இடதுபுற சக்கரம், சாலையில் சுமார் 5 அடி பள்ளத்தில் திடீரென சிக்கியது. இதனால் தேரோட்டம் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டது.
அதனையடுத்து, தேரோட்டப் பணியாளர்கள், பெரிய ஜாக்கிகளைக் கொண்டு தேரின் சக்கரம் மேலும் பள்ளத்தில் இறங்காமல் இருக்க, தேரை தரை மட்டத்திற்கு உயர்த்தினர். சுமார் 110 அடி உயரமும், 500 டன் எடை கொண்ட இந்த தேரை, பல்லத்தில் இருந்து மீட்க சம்பவயிடத்திற்கு உடனடியாக கிரேன் கொண்டு வரப்பட்டது.
பின்னர், முன்சக்கரத்தை கிரேன் உதவியோடு தூக்கி நிறுத்திவிட்டு, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் பெரிய கருங்கல், ஜல்லி கற்கள் ஆகியவற்றைக் கொண்டு கொண்டு நிரம்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் பின்னர், தேரின் சக்கரங்கள் ஓட ஏதுவாக, பள்ளத்தின் மீது பெரிய தடிமனான ஒரு இரும்பு பிளேட்டை வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.