கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இன்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஓபிஎஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுகவுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் எனவும், ஒன்றிணைவோம் வா எனவும் கூறியுள்ளார். அவர் அதிமுகவையும், தொண்டர்களையும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.
அதிமுகவுக்கு பல்வேறு சோதனைகள் வந்தபோது, மேலும் சோதனைகளை கொடுத்தவர் ஓபிஎஸ். அதிமுக தலைமை அலுவலகத்தில் குண்டர்களை வைத்து அடித்து, உடைத்து ஆவணங்களைத் திருடியவர். சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர். இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து தற்போது போட்டியிட்டவர்.
இவருக்கு அதிமுக பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார். அவரை நல்லவர் எனக்கூறி கை கோர்த்துள்ளார். அதிமுகவின் உண்மையான விசுவாசி யாரும் அவர் பக்கத்தில் கூட அமர மாட்டார்கள். எனவே, இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஓபிஎஸ்-க்கு அருகதை இல்லை.
சசிகலா, ஜெயலலிதாவிற்கு பணி செய்ய வந்தவர். அவருடன் 36 ஆண்டுகள் பின்னால் நின்று அதிகாரத்தை சுவைத்தவர். அவர், தற்போது அனைவரும் ஒற்றுமையாக வாருங்கள் என அழைத்து அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை விடுத்து 24 மணி நேரமாகியும் யார் அவரிடம் சென்றார்கள் என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகின்றேன். அதிமுகவில் குழப்பம் விளைவிக்க வேண்டுமென ஒரு சிலர் தொடர்ந்து முயல்கின்றனர். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ், அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைத்து கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், அதிமுக – பாஜக, பாமக, – தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தும் 18 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது. ஆனால், 2024ஆம் ஆண்டில், தேமுதிகவோடு மட்டும் கூட்டணி வைத்த நிலையில், 20.46 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. ஆனால், திமுக கடந்த 2019-ல் 33.25 சதவீத ஓட்டுகளை பெற்ற நிலையில், தற்போது 26.93 ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது.