பிறக்கப் போகும் புத்தாண்டில் நம் வாழ்க்கை நல்லபடியாக மாறும், நல்ல மாற்றத்தை தரும் என அனைவரும் நினைப்பதுண்டு. ஆனால், எந்த ஒரு முயற்சி, நம்பிக்கை, தன்னம்பிக்கை, திறமை இல்லாமல் இவை சாத்தியம் கிடையாது. இந்நிலையில், கடந்த கால பின்னடைவுகள், கெட்ட நினைவுகளை மறந்து வாழ்க்கையில் முன்னேற இந்த புத்தாண்டில் சில மாற்றங்களை கொண்டு வாருங்கள்.
வெதுவெதுப்பான நீருடன் நாளை தொடங்குங்கள்: தினசரி நாளை வெதுவெதுப்பான நீருடன் தொடங்குவதால் நீங்கள் எதிர்பாராத பல நன்மைகளை பெறலாம். இந்த எளிமையான பழக்கம், செரிமானத்தை மேம்படுத்துவது, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், சருமம் பளபளப்பாகவும், உடல் உறுப்புகள் நன்கு செயல்பட வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் குடிப்பது அவசியமாக இருக்கிறது. உடலில், வைட்டமின் சி சத்து அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்கள், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழ சாறு கலந்து குடித்து வரலாம்.
1 மணி நேரத்திற்கு 10 நிமிட இடைவெளி: இளம் வயதினர் தொடங்கி பெரியவர்கள் வரை பலரும் கணினி முன் அமர்ந்து வேலை பார்க்கும் சூழல் உள்ளது. புகைப்பிடிப்பதை விட ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது ஆபத்து என சமீபத்திய ஆய்வு ஒன்று வெளியானது. அதுமட்டுமல்லாமல், ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது இரத்த ஓட்டத்தை குறைத்து பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் 10 நிமிட பிராக் எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்துங்கள். வேலை நேரத்தில் மினி பிரேக் எடுத்து நடப்பது, ஸ்ட்ரெச் செய்வது பல பிரச்சனைகள் ஏற்படுவதில் இருந்து தடுக்கிறது.
இனிப்பு தின்பண்டங்களை தவிருங்கள்: அதிகப்படியான இனிப்பு நுகர்வு, இதய நோய் முதல் பல் துவாரங்கள் வரை பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதில், அதிகப்படியான கலோரிகள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை மட்டுமே உள்ளதால், டீ, காபி, பிஸ்கட், பானங்கள் என இனிப்பு அதிகம் உள்ளவற்றை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். தினசரி 4 டீ குடிப்பவர்கள், அதை குறைத்து 2 முதல் 1 டீ குடிக்கலாம். வேலை நேரத்தில் பசி எடுத்தால், இனிப்பு சார்ந்த தின்பண்டங்களை எடுத்துக்கொள்ளாமல், பழங்கள், வேக வைத்த சுண்டல் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
தியானம்: உடல் ஆரோக்கியத்தை போல மன ஆரோக்கியமும் இன்றியமையாத ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மன அழுத்தம் ஏற்பட்டால், மனமும் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். அந்த வகையில், இந்த புத்தாண்டில் இருந்து தினசரி 5 முதல் 10 நிமிடங்களுக்கு தியானம் அல்லது மூச்சுப்பயிற்சி செய்ய தொடங்குங்கள். தொடர்ந்து இவற்றை செய்து வர அமைதியாகவும், அனைத்து சூழ்நிலையிலும் சரியான முடிவு எடுக்க தெளிவான மனநிலை வரும்.
தூக்கம்: உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட அடித்தளமாக இருக்கும் தூக்கமின்மையை இந்த புத்தாண்டில் விரட்டுங்கள். தினசரி நிம்மதியான 8 மணி நேர தூக்கத்தை பெற முயற்சி செய்யுங்கள். அதற்கு தடையாக இருக்கும் மொபைல் போன் போன்றவற்றை தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு பயன்படுத்துவதை நிறுத்துங்கள். நல்ல தூக்கம், உடலையும் மனதை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
இதையும் படிங்க: 2025ம் ஆண்டிற்கு ரெடியா? புத்தாண்டு ரெசல்யூசன் எடுத்தாச்சா? உங்களுக்காக சூப்பர் ஐடியாஸ் இதோ!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.