சென்னை: இயற்கை சீற்றங்கள் உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. தினமும் உலகத்தின் உள்ள ஏதோ ஒரு பகுதியில் இயற்கை சீற்றம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுவருகிறனர். அந்த வகையில், இந்த (2024) வருடமும் உலகில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் புயல், வெள்ளம், மழை, நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை இழந்து, பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் பேரிடர்கள் என்பது மனிதர்களால் ஏற்படுத்தப்படும் இயற்கைக்கு மாறான செயல்கள் என்றே கூறப்படுகிறது. இந்த பேரிடர்களால், மனிதர்கள் உயிர், உடமைகள் மட்டுமல்லாமல், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நடப்பாண்டில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பேரிடர்கள் குறித்து சுருக்கமாகக் காணலாம்.
வெப்ப அலை தாக்கம்:
வெப்ப அலை தாக்கம் என்பது கடந்த 10 ஆண்டுகளாக உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த வெப்ப அலை தாக்கமானது, கடற்கரையில் பகுதிகளில் இருக்கக்கூடிய இடங்களில் அதிகமாக இருக்கும். இந்நிலையில் இந்தியாவின் விமானப்படையின் 92வது ஆண்டு விழா அக்டோபர் மாதம் ஏழாம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இந்திய விமானப் படையின் சாகசனை நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்த ஏர் சோ நிகழ்ச்சியை பார்வையிட கிட்டத்தட்ட 13 லட்சம் பொதுமக்கள் கடற்கரைக்கு கூடியுள்ளனர். அதன் காரணமாக கடற்கரைக்குச் சென்றவர்களில் வெப்பம் மற்றும் கூட்டணி இசையின் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதில், 250-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து பாதிக்கப்பட்டனர். இந்த வெப்ப அலை தாக்கம் இந்தியா முழுவதும் அதிகமாக ஏற்பட்டு கொண்டிருக்கக் கூடிய நிலையில், இச்சம்பவம் அதிர்வலைகளை உருவாக்கியது. மேலும், உலகின் மிக வெப்பமான நாளாக ஜூலை 21ஆம் தேதி பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை:
வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கியது. முதல் சுற்றாக பெய்த வடகிழக்கு பருவமழை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும், தென் மாவட்டங்களான மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் அதிக அளவில் மழை பெய்துள்ளது. குறிப்பாக, சென்னையில் மழைநீர் அதிகமாக தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்தது.
ஃபெஞ்சல் புயல் (Cyclone Fengal):
மீண்டும் இரண்டாம் சுற்றில் வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து. தொடர்ந்து நவம்பர் 29ஆம் தேதி அன்று புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஃபெஞ்சல் புயல் என்று பெயரிட்டது.
மேலும், இப்புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்தது. இந்த புயலினால் அதிகமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. சென்னையில் முக்கிய பகுதிகள் அனைத்து இடங்களிலும் தண்ணீர் அதிகளவு தேங்கி பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதளவு பாதித்தது. பின்னர் மீண்டும் டிசம்பர் 14ஆம் தேதி தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்தது.
நிலச்சரிவு:
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்தது. குறிப்பாக திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் அண்ணாமலையார் கோயில் பின்புறம், வஉசி நகர் பகுதியில் டிசம்பர் 1ஆம் தேதி அன்று தீபம் ஏற்றும் மலைப்பகுதி அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, மலை அடிவாரத்தில் இருந்த மூன்று வீடுகள் மண்ணில் புதைந்தது, அதில் வீட்டிலிருந்த ஐந்து குழந்தைகள் இரண்டு பெரியவர்கள் என ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: 2024 -இல் சென்னை ஐஐடியின் நீளும் சாதனைப் பட்டியல் இதோ உங்கள் பார்வைக்காக..!
இதனையடுத்து திருவண்ணாமலையில் டிசம்பர் 2ஆம் தேதி நிலச்சரிவில் சிக்கியிருந்த நான்கு பேரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அதன் பின்னர் இரண்டு பேர்களின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, டிசம்பர் 3ஆம் தேதி ஒரு சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள வயநாட்டில் பெய்த மழையால், ஜூலை 30ஆம் தேதி காலையில் 3 கிராமங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 130 பேர் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இக்கோர நிகழ்வு கேரள மாநிலத்தின் மிகப்பெரிய பேரிடராகக் கருதப்படுகிறது.
காற்று மாசுபாடு:
அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி அன்று சென்னையின் முக்கிய நான்கு இடங்களில் காற்று மாசுபாட்டின் அளவு 200-ஐ தாண்டியுள்ளது. இது இயல்புடையதைவிட அதிகமாகும். அதாவது, ஆலந்தூரில் 257 அளவிலும், அரும்பாக்கத்தில் 250 அளவிலும், பெருங்குடியில் 238 அளவிலும், வேளச்சேரியில் 217 அளவிலும் என காற்று மாசுபாடு பதிவாகியுள்ளது. காற்றின் தரக் குறியீடு அதிகமாக உயர்ந்துள்ளதால், சென்னையை சுற்றியுள்ள பல பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களுக்கு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.