வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர்.பசுபதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலூர் தொகுதிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவருடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேலூர் தொகுதி பொறுப்பாளரான தம்பிதுரை, மாவட்ட நிர்வாகி எஸ்.ஆர்.கே.அப்பு ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்நிலையில், அங்கு வசிக்கும் திமுகவின் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு மூத்த கவுன்சிலரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஆர்.பி.ஏழுமலைக்கு அதிமுக வேட்பாளர் டாக்டர். பசுபதி, மரியாதை நிமிர்த்தமாக நன்றி தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்து திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினரான ஆர்.பி.ஏழுமலை அவரை வரவேற்றுள்ளார்.
மேலும், உடன் இருந்த அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கும், மாவட்ட நிர்வாகி எஸ்.ஆர்.கே.அப்பு ஆகியோருக்கும் நன்றி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அவர்களும் மரியாதை நிமிர்த்தமாக நன்றி கூறியுள்ளனர். இதையடுத்து, தம்பிதுரையுடன் சில நிமிடங்கள் நன்கு உரையாடிய ஆர்.பி.ஏழுமலை, அவருக்கு வெற்றி வாழ்த்துக்களைக் கூறியதாக திமுகவினர் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள பிற திமுக தொண்டர்கள் இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அங்கு மரியாதை நிமிர்த்தமாக சந்தித்த இவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது. இதற்கிடையே, இச்சம்பவம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந்த், அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் மத்தியிலும் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாக, திமுக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், திமுக நிர்வாகக் குழுவைச் சேர்ந்த பலர் தொகுதிக்குள் உள்ள பிரச்னைகளை ஆராய்ந்து தேர்தலை நடத்துவதற்கு முன்பு, உட்கட்சிப் பிரச்னைகளை தீர்க்கும் பொருட்டாக சில நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி குறிப்பிடப்பட்ட ஒருவர் தான், ஆர்.பி.ஏழுமலை. அமைச்சர்கள் உதயநிதி மற்றும் எ.வ.வேலு ஆகியோர், ஆர்.பி.ஏழுமலையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, வேலூர் மாநகராட்சி பொறுப்பை திமுக கைப்பற்றியது. இதையடுத்து, அங்குள்ள நான்கு மண்டலக் குழுத்தலைவர் பதவிகளுக்கு நிர்வாகிகள் பலரும் போட்டி போட்டனர். சத்துவாச்சாரி பகுதி உள்ளிட்ட இரண்டாவது வார்டு கமிட்டி அமைக்கப்பட்டபோது, ஆர்.பி.ஏழுமலை பதவிக்காக கடும் போட்டியிட்டார். இருப்பினும், அவர் அதைப் பாதுகாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்தே, அவர் சத்துவாச்சாரி பகுதி கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்து வருவதாகவும், மேலும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பாக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுவதில் அவருக்கு விருப்பமில்லை என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், இதற்காகத்தான் அவர் அதிமுக வேட்பாளருடன் இணக்கமாக பேசியதாகவும் அவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
மேலும், ஆர்.பி.ஏழுமலையின் இச்செயலைக் கண்டித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக, திமுக நிர்வாகிகள் பலர் தகவல் தெரிவித்துள்ளனர். அதோடு ஆர்.பி.ஏழுமலை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இத்தகைய செயலின் நிமித்தம் திமுக கட்சியினரிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"ஸ்டாலினுக்கு எச்சரிக்கை மணி.. திமுக கூட்டணி தமிழ்நாடு முழுவதும் டெபாசிட் இழக்கும்" - எடப்பாடி பழனிசாமி பேச்சு! - Lok Sabha Election 2024