வடக்குபாளையம் கிராமமக்கள் கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், மேலப்பாளையம் ஊராட்சியில் உள்ள வடக்குபாளையம் குமரன் லே அவுட் குடியிருப்பைச் சேர்ந்த பொதுமக்கள், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம் எனக் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தைத் துவக்கினர்.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த துஜான் என்பவர் கூறுகையில், "கரூர் நகரப் பகுதியை மிகவும் ஒட்டியுள்ள மேலப்பாளையம் ஊராட்சியில் உள்ள வடக்குபாளையம் கிராமத்தில், குமரன் லே அவுட் குடியிருப்பில் கடந்த 9 வருடங்களில் 100 குடும்பங்களுக்கு மேல் புதிதாக வீடு கட்டி குடியேறி வருகின்றனர். ஆனால், இப்பகுதியில் அடிப்படை வசதிகள் என எதுவும் இல்லை.
மேலப்பாளையம் ஊராட்சி சார்பில், கழிவுநீர் வடிகால் வசதி, குடிநீர் சீராக வழங்குவதற்கும், குப்பைகளை முறையாக பெற்று, குடியிருப்புப் பகுதிக்குள் இருந்து அகற்றுவதற்கும், மண்சாலைகளை சிமெண்ட் சாலைகளாகவோ அல்லது தார் சாலைகளாகவோ மாற்றித் தர வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தேர்தல் புறக்கணிப்பு செய்து போராட்டத்தை துவக்கியபோது, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி மற்றும் அரசு அதிகாரிகள் வாக்குறுதி அளித்துச் சென்றனர்.
ஆனால், இதுவரை அந்த கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபுசங்கர், நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் நீர்நிலைத்தேக்கத் தொட்டி அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால், அதிகாரிகள் அந்த திட்டத்தை நிறைவேற்றாமல், காலதாமதப்படுத்தி வருகின்றனர். எனவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக இன்று இப்போராட்டத்தை துவக்கியுள்ளோம்" என தெரிவித்தார்.
இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த தாரா என்ற பெண் கூறுகையில், "கிராமப்புறங்களில் சுத்தமான காற்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான், நகர்ப்புறத்தை விட்டுவிட்டு வடக்குபாளையம் கிராமத்தை தேர்வு செய்து இங்கு குடிவந்துள்ளோம். ஆனால், இங்கு அடிப்படை வசதிகளுக்காகவே பல ஆண்டுகளாக போராட வேண்டிய நிலை உள்ளது.
கடந்த முறை போராடியபோது, 2 தெருக்களுக்கு மட்டும் பேருக்காக சாலை அமைத்துவிட்டு, ஊராட்சி நிர்வாகம் கோரிக்கையை நிறைவேற்றியது போல கணக்கு காண்பித்துள்ளது. போதிய நிதி ஒதுக்கீடு செய்தாலும், அதனை நிறைவேற்ற மனம் இல்லாதது போன்ற காரணங்களால், இன்று மீண்டும் போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" என வேதனையுடன் தெரிவித்தார்.
பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, மேலப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் வெண்ணிலா, பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என பொதுமக்கள் தெரிவித்ததால், அடுத்த 10 நாட்களுக்குள் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துவிட்டு அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.
கரூர் மாவட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, திமுகவைச் சேர்ந்த கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, திமுகவைச் சேர்ந்த தாந்தோணி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கண்ணையன் ஆகியோர் கிராமத்திற்காக சிறு முயற்சியாவது மேற்கொண்டிருந்தால் ஏதாவது ஒரு கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: "திமுகவுடன் தொகுதி பங்கீடு செய்ய அவகாசம் தேவைப்படுகிறது"- திருமாவளன் கூறும் விளக்கம் என்ன?