புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று (பிப்.11) பங்கேற்ற சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடியின் செல்வாக்கு குறித்து நான் கூறிய கருத்திலிருந்து பின்வாங்கப் போவது கிடையாது. நான் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை.
வட இந்தியாவில் மோடிக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது. தென்னிந்தியாவில், அவருக்கு அதே செல்வாக்கு குறைவு. காங்கிரஸ் கட்சியில் இருந்து எனக்கு விளக்கம் கேட்டு எவ்விதமான நோட்டீஸும் வரவில்லை. நான் சொன்ன கருத்தில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை. நான் சிந்தித்துதான் கருத்து சொல்கிறேன்; நான் இதுவரை பேசிய எந்த கருத்திலும் தவறில்லை. மனசாட்சிக்கு உட்பட்டுத்தான் பேசியுள்ளேன்.
ராணுவ வீரர்களைத் தவிர வேறு யாருக்கும் விருது தரக்கூடாது: எனக்கு நோட்டீஸ் எதுவும் வரவில்லை. வந்ததாக செய்தி வந்தது, வதந்தியே. விளக்க நோட்டீஸ் அனுப்பினால், பதிளிளிக்க நான் தயாராக உள்ளேன். சிவகங்கை தொகுதியைப் பொறுத்தவரையில், ஒரு அரசியல் கட்சி என்று இருந்தால் பலருக்கும் பல கருத்து இருக்கத்தான் செய்யும்' என்றார். தொடர்ந்து பேசிய அவர், என்னைப் பொறுத்தவரையில், உயிரிழந்தவர்கள் யாருக்குமே விருது கொடுக்கக்கூடாது. அதேபோல, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாது.
காங்கிரஸ் ஆட்சியில் நீட் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கே உரிமை: விருது பெற்றவர்களை நான் குறைவாக மதிப்பிடவில்லை. அதேவேளையில், அந்த விருதினை வேண்டாம் என்று சொல்லக்கூடிய உரிமை அவர்களுக்கு இல்லாமல் போய்விடும். மனசாட்சிபடி நான் யாரையும் ஒதுக்காமல், கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளேன். நீட் விவகாரத்தில் (NEET Exam) காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நீட் வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவு எடுக்கும் உரிமையை மாநில அரசுக்கே வழங்குவோம்.
கட்சி எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ள நான் தயாராக உள்ளேன். கட்சி சீட் கொடுத்தால் நிற்பேன். எந்த தொகுதியில் நிற்க சொன்னாலும் நிற்பேன். கட்சி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்படுவேன். கருத்துக்கணிப்பை நம்ப முடியாது. ஒரு சிறிய அளவு சாம்பிளை (Sample) வைத்து, ஒட்டுமொத்த மக்களும் இதே கருத்தில் தான் உள்ளனர் என்று கூற முடியாது.