கன்னியாகுமரி:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு சரியாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் 950 வேட்பாளர்களும், புதுச்சேரி தொகுதியில் 26 வேட்பாளர்களும் களம் காணும் நிலையில், தமிழகத்தில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 26 ஆயிரத்து 699 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.
அந்த வகையில், நாடு முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2024 மக்களவைத் தேர்தலில், முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதை அடுத்து, ஜனநாயகத்தின் குடிமக்களாக தங்களின் கடமைகளை ஆற்ற, காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து, வாக்காளர்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், அரசியல் பிரமுகர்களும், திரைப்பட பிரபலங்களும் தொடர்ந்து தங்களின் வாக்குகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளிக்கூடத்தில், பூத் எண் 174ல் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.