திருவாரூர்:அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், ஆளும் ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சி இடையே போட்டி நிலவுகிறது. குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயக கட்சி சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை, அதிபர் ஜோ பைடன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாகவும், இம்முறை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக துணை அதிபராக உள்ள கமலா ஹாரீஸ்-க்கு முழு ஆதரவு வழங்க விரும்புவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதனால், ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரீஸ் பக்கம் திரும்பியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என, அவரது தாயார் பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் உறவினர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
துளசேந்திரபுரத்தில் கமலா ஹாரீஸ் உறவினர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu) கமலா ஹாரிஸ் உறவினர்களின் எதிர்பார்ப்பு:அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் முகமாக பார்க்கப்படும் கமலா ஹாரீஸின் உறவினர்கள் துளசேந்திரபுரத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த பிறகு ஈடிவி பாரத்திற்கு பேட்டியளித்தனர்.
கமலா ஹாரீஸின் உறவினர் ஆனந்த் கூறுகையில், "2019 தேர்தலில் கமலா ஹாரீஸ் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது திருவிழாவை போல் கொண்டாடினோம். இந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெறுவது உறுதி, அமெரிக்க அதிபரான பிறகு இந்தியாவின் வளர்ச்சி உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்" என்றார்.
துளசேந்திரத்தை சேர்ந்த உறவினரான ஐடி ஊழியர் ரூப தர்ஷினி கூறுகையில்," அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸின் பெயர் முன்னிறுத்தப்படுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். அவருக்காக நாங்கள் இறைவனை வேண்டுகிறோம். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இந்தியாவுக்கு வந்து நமது நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" எனக் கூறினார்.
இந்திய வம்சாவெளி: கமலா ஹாரீஸின் தாத்தா, பி.வி.கோபாலன், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஸ்டெனோகிராபராக இருந்து, பின்னர் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார். ஷாம்பியா நாட்டிற்கு அகதிகளை கணக்கெடுக்க அரசுமுறை பயணமாக சென்ற பி.வி.கோபாலன் அங்கேயே குடியேறினார். பின்னர், இரண்டாவது மகள் சியாமளாவை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கு திருமணம் செய்து வைத்தார். அந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் கமலா ஹாரீஸ்.
கமலா ஹாரீஸ் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு நெருக்கமாக உள்ளது. அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். உறவினர்களில் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் இன்றும் வசிக்கின்றனர். மேலும், அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்த கோயிலுக்கு கமலா ஹாரீஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார். அந்த விபரம் கோயில் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மன்னார்குடி டூ வாஷிங்டன்.. அமெரிக்க அதிபர் ஆவாரா கமலா ஹாரீஸ்!