தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடக்கும் போது அந்த நொடி.. கல்பனா சாவ்லா விருது பெற்ற செவிலியர் சபீனா பிரத்யேக பகிர்வு! - kalpana chawla award - KALPANA CHAWLA AWARD

Nurse Sabina: வயநாட்டின் நிலையை பார்த்தபோது, மனிதாபிமானமும், பொறுமையும் இன்னும் மக்களிடம் அதிகரிக்க வேண்டும் என கல்பனா சாவ்லா விருது பெற்ற செவிலியர் சபீனா ஈடிவி பாரத் வாயிலாக தெரிவித்தாா்.

கல்பனா சாவ்லா விருது பெற்ற செவிலியர் சபீனா
கல்பனா சாவ்லா விருதாளர் செவிலியர் சபீனா (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 3:19 PM IST

சென்னை:தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை கோட்டை கொத்தளத்தில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் சபீனாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதனையடுத்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் செவிலியர் சபீனா கூறியதாவது, “நீலகிரி மாவட்டத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறேன். வயநாட்டில் பாதிப்பு ஏற்பட்ட உடன் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து எங்களை அழைத்துச் சென்றனர்.

நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாட்டில் படுகாயம் அடைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவ முதலுதவி பெட்டியை இறுக பற்றிக்கொண்டு வெள்ளம் சீறி வரும் ஆற்றைக் கவனமாக ஜிப்லைன் மூலம் கடந்து சென்றேன். அப்போது கீழே பார்க்க வேண்டாம் என கூறினர்.

ஆண் செவிலியர்களைத் தான் ராணுவத்தினர் கேட்டனர். ஆனால், நான் செல்கிறேன் என கூறிவிட்டுச் சென்று, அங்கு படுகாயம் அடைந்திருந்த 30 முதல் 35–க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்துக் காப்பாற்றியுள்ளேன். மேலும், நீலகிரி மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சையை 3 வருடங்களாக அளித்து வருகிறோம்.

இதனால் படுகாயம் அடைந்து ரத்தத்தில் இருந்தவர்களைப் பார்க்கும் போது அச்சம் தெரியவில்லை. அங்கு சென்று சிகிச்சை அளித்தற்கு தமிழ்நாடு அரசு கல்பனா சாவ்லா விருது வழங்கி உள்ளது. இதனை நான் எதிர்பார்க்கவில்லை. வயநாட்டில் ஏற்பட்ட பாதிப்பை பார்க்கும் போது, மனிதர்களிடம் பொறுமையும், மனிதாபிமானமும் அதிகரிக்க வேண்டும் என கருதுகிறேன். செவிலியர்கள் ஏற்கனவே மனிதாபிமான அடிப்படையில் சேவை செய்து வருகின்றனர். அவர்கள் தங்களின் சேவையை அதிகமாக செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

யார் இந்த சபீனா?நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் சபீனா, ANM பயிற்சியில் டிப்ளமோ பெற்றவர். ஒற்றைத் தாயாக இருந்த போதிலும், மனித குலத்திற்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டுமென்று தன் ஒரே மகளையும் இளங்கலை செவிலியர் படிப்பைப் படிக்க வைத்துள்ளார்.

இந்தியாவையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவின் போது, தன் ஊயிரை துச்சமென நினைத்து தொடர் மழையின் மத்தியிலும், ரெயின் கோட் அணிந்து, முதலுதவி பெட்டியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில், சபீனாவின் துணிவான செயலைப் பாராட்டும் விதமாக அவருக்கு 2024ஆம் ஆண்டிற்கான துணிவு மற்றும் வீர சாகசச் செயலுக்கான 'கல்பனா சாவ்லா விருது' வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்துள்ளது பாராட்டத்தக்கது.

இதையும் படிங்க:சுதந்திர தின விழாவில் 'தகைசால் தமிழர்' விருது பெற்ற முனைவர் குமரி அனந்தன்.. விருதுக்கு தேர்வாக காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details