சென்னை :சென்னைகிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், தாம்பரம் அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (33) என்பவர் பித்தப்பையில் கல் இருப்பதாகக் கூறி கடந்த நவ 13ம் தேதி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் அவர் இன்று (நவ 15) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து விக்னேஷின் அண்ணன் பார்த்திபன் மருத்துவமனை சிகிச்சை முறை குறித்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், "சில நாள்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட தம்பியை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தோம். அப்போது அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டறியப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் தங்களால் அதிகளவில் பணம் செலவு செய்ய முடியாது என்பதால், இம்மருத்துவமனையில் கடந்த நவ 13ம் தேதி சிகிச்சைக்காக சேர்த்தோம். ஆனால், அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு எந்தவித சிகிச்சையும் ஒழுங்காக வழங்கவில்லை. சிகிச்சை சரியாக வழங்காததால் அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவித்தார்.
இதுகுறித்து விக்னேஷின் மனைவி பரிமளா கூறுகையில்,"எனது கணவரின் நிலையை மருத்துவர்கள் முன்கூட்டியே கூறியிருந்தால், நாங்கள் வேறு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்த்திருப்போம். மருத்துவர்கள் சரியான சிகிச்சை வழங்காததால் தான் எனது கணவர் இறந்துவிட்டார்" என தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த விக்னேஷ் உடலை அவரது உறவினர்களுடன் காவல்துறையின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்படைத்தனர்.
இதுகுறித்து விக்னேஷ் உறவினரின் மாமா பாலையா கூறுகையில், "இறந்தவருக்கு முழு காரணமும் மருத்துவர்கள் தான். மருத்துவமனையில் சேர்த்தது முதல் பரிசோதிப்பதற்காக ஒரு மருத்துவரும் வரவில்லை. அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவரை குத்தியதற்கு எவ்வளவு விரைவாக காப்பாற்றினார்கள்.
ஆனால் பொதுமக்களை காப்பாற்ற தவறி விட்டார்கள். மருத்துவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தது போல எழுதிக்கொடுக்க சொன்னார்கள். நாங்கள் எழுதிக்கொடுத்து உடலைப் பெற்றுச் செல்கிறோம்" என தெரிவித்தார்.