தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடிச்சம்பாடி ஊராட்சி மன்ற தலைவராக மலர்கொடி சீனிவாசன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். பட்டியல் சமூகத்தினரான இவர் தான் இந்த ஊராட்சியின் முதல் பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர். இவர், இதற்கு முன்பு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக இருந்துள்ளார். அதிமுக கட்சியிலும் இவர் தஞ்சை கிழக்கு மாவட்ட மகளிரணி தலைவியாக உள்ளார்.
பட்டியல் சமூகத்தினரான இவர், ஊராட்சி மன்ற தலைவராகப் பதவியேற்றது முதல் தொடர்ந்து பிற சமூகத்தைச் சேர்ந்த துணைத் தலைவர் சிவபாலன் (பாமக), மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வக்குமார் (திமுக) ஆகியோர் தன்னை தொடர்ந்து பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்து வருவதாக மலர்கொடி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த கடிச்சம்பாடி ஊராட்சி மன்றத்தில் ஊராட்சியில் 660 குடியிருப்புகளில் 2050 பேர் வசித்து வருகின்றனர். மொத்தம் உள்ள ஆறு வார்டுகளில், 1. ஆனந்தராஜ் (அதிமுக), 2. சிவபாலன் (பாமக), 3. விமல் (திமுக), 4. அஞ்சம்மாள் (திமுக), 5. மகேஸ்வரி (திமுக), 6. மனோகரன் (திமுக) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பினர்களாகவும், ஊராட்சி மன்ற தலைவர் பதவி பட்டியலின சமூகத்தினருக்குச் சேர்ந்தவருக்கு ஒதுக்கப்பட்டதால், இப்பொறுப்பில் அதிமுகவைச் சேர்ந்த மலர்கொடி சீனிவாசன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2வது வட்டத்தைச் சேர்ந்த சிவபாலன் (பாமக) மன்ற உறுப்பினர்களால் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் துணைத் தலைவர் சிவபாலன் (பாமக) மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வக்குமார் (திமுக) ஆகியோர் மேலாதிக்க சிந்தனையோடு, தன்னை தொடர்ந்து பணி செய்ய விடாமல் தடுத்து தொந்தரவு செய்து வருவதாக, அதிகாரிகளிடம் தொடர்ந்து மலர்கொடி சீனிவாசன் புகார் தெரிவித்து வந்துள்ளார்.