மதுரை:மதுரை மாவட்ட திராவிட கழக காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் சே.முனியசாமி என்பவரது 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு "விறகு வண்டி முதல் விமானம் வரை" என்னும் நூல் வெளியீட்டு விழாவை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவில் அமைந்துள்ள தனியார் மஹாலில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற திராவிடர் கழகக் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியில் இருந்து மீள கள்ளச்சாராய விவகாரத்தை எதிர் அணி பயன்படுத்துவதாக தெரிவித்தார். இந்தியாவில் பல மாநிலங்களில், ஏன் தமிழகத்தில் முந்தைய ஆட்சியாளர்களின் காலத்தில் ஏராளமான கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்த அவர், 40 தொகுதிகளில் கிடைத்த படுதோல்வியை மறைக்க அதிமுக, பாஜக கள்ளச்சாராய விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாகவும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை மனதில் வைத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை பேசி வருவதாகவும் தெரிவித்தார்.
ஜெயலலிதா இறந்த போது அதை விசாரிக்க எடப்பாடி பழனிசாமி நியமித்த ஒரு நபர் கமிஷன் போல, தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்திருக்கும் ஒரு நபர் விசாரணை கமிஷன் நடந்து கொள்ளாது எனத் தெரிவித்தார். தகுந்த விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கையைக் கொடுக்கும் கமிஷனாக கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு நபர் கமிஷன் செயல்படும் எனத் தெரிவித்தார்.