சென்னை: மதுரையில் கடந்த 2023 ம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் செல்லூர் ராஜு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, "எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியதாகவும், முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவில்லை என்றும் தனது கருத்தை மட்டுமே தெரிவித்ததாகவும்" செல்லூர் ராஜு தரப்பில் வாதிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அரசு தரப்பில், "முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் செல்லூர் ராஜு பேசியுள்ளதால் அவர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும். வழக்கை ரத்து செய்யக் கூடாது" என்று வாதிடப்பட்டது.
இதையும் படிங்க:எம்.பி - எம்.எல்.ஏக்களுக்கு எதிரான ஊழல் வழக்குகள்; சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
இருதரப்பினர் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வேல்முருகன், "திமுக - அதிமுக இரண்டு கட்சிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் இரு தரப்பினருக்கும் இல்லை. மாறாக மாறி மாறி இருவரும் குறை சொல்வதே வாடிக்கையாக வைத்துள்ளீர்கள்" என்று அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், சாதனை மட்டும் சொல்லக்கூடிய அளவில் இரு கட்சிகளும் இல்லை என்றும், இப்படி பேசினால் அடுத்த தலைமுறை எப்படி உருப்படும் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி, இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இரு தரப்பும் மாறி மாறி குறை சொல்லிக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி வேல்முருகன், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சில் எந்த அவதூறும் இல்லை என்று கூறி அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், "ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் ஒரு அரசியல் கட்சி, மற்றொரு கட்சியை குற்றம் சாட்டுவதே இன்றைய நிலையாக உள்ளது" என்று சுட்டிக் காட்டி அதிருப்தி தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்