சென்னை:ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜேஇஇ) அட்வான்ஸ் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் டெல்லி மண்டலத்தைச் சேர்ந்த மாணவர் வேத் லகோதி 355 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
சென்னை ஐஐடி, ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், 2024-25ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு கடந்த மே 26ல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 1 லட்சத்து 80 ஆயிரத்து 200 பேர் எழுதினர். இதில் 48 ஆயிரத்து 248 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 7 ஆயிரத்து 964 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகளில் டெல்லி ஐஐடியைச் சேர்ந்த மாணவர் வேத் லகோதி 360 மதிப்பெண்களுக்கு 355 பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். பெண்கள் பிரிவில் மும்பை மண்டலத்தைச் சேர்ந்த த்விஜா தர்மேஷ்குமார் பட்டேல் 360க்கு 332 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.