சென்னை:சென்னை,கோயம்பேடு அங்காடி நிர்வாகக் குழு அலுவலகத்தில் பெருநகர சென்னை காவல் இணை ஆணையர் விஜய குமார் தலைமையில், கோயம்பேடு தலைமை நிர்வாக அலுவலரும்,மாவட்ட வருவாய் அலுவலருமான இந்துமதி முன்னிலையில் மொத்த விற்பனை அங்காடி வளாக வியாபாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று(பிப்.06) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காவல் துறை இணை ஆணையர் விஜய குமார் பேசும் போது "கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் கண்காணிப்பினை தீவிரப்படுத்த வியாபாரிகளிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வாகனங்களின் விவரங்களை சங்கத்தின் மூலமாக 15 நாட்களுக்குள் காவல்துறைக்கு அளித்திட வேண்டும்.
மேலும், கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்தி அங்காடிக்கு வரும் சரக்கு வாகனங்களைத் தணிக்கைக்கு உட்படுத்துவதன் மூலம் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருவதைத் தடை செய்யலாம். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தில் இரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, வியாபார நேரத்தில் ரோந்து பணியினை தீவிரப்படுத்த காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.