தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாசிசம் அல்லாமல் பாயாசமா?' விஜய் சரியாகத்தான் பேசியுள்ளார்.. - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு!

பாசிசம் அல்லாமல் பாயாசமா என்று தவெக மாநாட்டில் விஜய் பேசியது சரிதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

சென்னை: முத்துராமலிங்கத் தேவரின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியது, “தேசியம், தெய்வீகம் இரண்டும் இரு கண்கள் என வாழ்ந்து மறைந்தாலும், முத்துராமலிங்கத் தேவரைப் பொறுத்தவரை, கல்வி அனைவரும் பெற வேண்டும். கல்வி பெறுவதோடு இல்லாமல், வீரத்தோடு இருக்க வேண்டும் என்ற வகையில் திண்ணை பிரச்சாரம் செய்தார். அதன் மூலம் சுதந்திரப் போராட்டத்திற்கு இளைஞர்களை அதிகமான அளவுக்கு ஈடுபடுத்தினார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்தவர்'' என்றார்.

மேலும், “சென்னையில் 9 இடங்களில் மாநகராட்சி விளையாட்டுத் திடல்களை தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் விளையாட்டுத் துறைக்கே சாபக்கேடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒடுக்கப்பட்ட மக்கள் விளையாட்டு வீரர்களாக முன்னேறி வருகின்றனர். இந்தச் செயலின் காரணமாக அவர்கள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மாநகராட்சியின் இந்த செயலின் மூலம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை மழுங்கடிக்கக் கூடிய துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்'' எனக் கூறினார்.

இதையும் படிங்க:அஜித்துக்கு வாழ்த்து சொன்னால் விஜய்க்கு கோவம் வருமா? உதயநிதி குறித்து தமிழிசை கேள்வி!

தொடர்ந்து அவர், “அதிமுக ஆட்சிக் காலத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கும் பொழுது முன்னதாகவே மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது வழக்கம். ஆனால், திமுக ஆட்சியில் வழங்கப்படுவது இல்லை. மு.க.ஸ்டாலினுக்கு அவருடைய தந்தைக்கு நினைவிடம் கட்ட பணம் இருக்கிறது. பேனா சின்னம் கட்ட பணம் இருக்கிறது. ஆனால், மீனவர்களின் சேமிப்பு பணத்தை உதவித் தொகையாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு வழங்க பணம் இல்லையா? இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தவெக மாநாட்டில் விஜய் கூறியது சரிதான். மத்திய அரசு பாசிசத்தை நோக்கிச் செல்லும் போது, மாநில அரசும் பாசிசம் அல்லாமல் பாயாசமா? என நடிகர் விஜய் சரியாகத் தான் கூறியுள்ளார். திமுக அரசை எதிர்ப்பவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். திமுகவினரால் எதிர்கட்சிகள் ஒடுக்கப்படுகிறது. இது பாசிசம் இல்லையா? அனைத்து விதத்திலும் ஜனநாயக விரோதச் செயலைச் செய்து, அதன் மூலம் பத்திரிகையாளர்கள், விவசாயிகள் ஆகியோரை திமுக அரசு ஒடுக்கி வருகிறது.

தலைவர் எம்ஜிஆர் உலகம் முழுவதும் இரவா புகழாக உள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி துவங்கும் பொழுது, அவரது முதல் மாநாட்டில் எம்ஜிஆரைப் பற்றி பேசினார். தற்பொழுது விஜய் அவருடைய மாநாட்டில் எம்ஜிஆரைப் பற்றி பேசி உள்ளார். இன்று வரை அவருடைய புகழ் பேசப்படுகிறது. ஆனால், கருணாநிதியின் புகழை ஒருவர் கூட பேசவில்லை. அவருடைய கட்சிக்காரர்கள் மட்டுமே அவருடைய புகழைப் பேசி வருகின்றனர்'' என குறிப்பிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details