திருச்சி: சிலம்பம் என்பது ஒரு தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டாகும். ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று கொண்டு விளையாடி வருகின்றனர். திருச்சி மாவட்ட யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிலம்பப் பயிற்சி கடந்த நான்கு வருடமாக நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிலம்பப் பயிற்சி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர். அதில் இரண்டு மாணவர்கள் கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் முதலிடம் பிடித்தார்கள். அதன் அடிப்படையில் தாய்லாந்தில் ஜனவரி 26, 27 என இரண்டு நாட்கள் உலக அளவிலான சிலம்பப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளைக் சேர்ந்த வீரர்கள் ஒற்றைக் கம்பம், இரட்டைக் கம்பம், சண்டை பயிற்சி, போன்ற சிலம்பப் போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முகமது இர்பான், முகமது சல்மான், முகமது ஹர்ஷத் ஆகிய மூன்று மாணவர்கள் உலகளாவிய சிலம்ப போட்டியில் முதலிடம் பிடித்து விருதுகளையும், பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.