தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மாநில எல்லையில் போராட்டத்தை அறிவித்த தமிழக விவசாயிகள் - Mullaperiyar Dam Issue

முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபடும் கேரளா மாநில அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் மாநில எல்லையில் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்
பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 7:47 PM IST

தேனி:முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேரளா அரசை கண்டித்தும் தமிழக விவசாயிகள் தமிழக - கேரளா மாநில எல்லையான குமுளி எல்லைப் பகுதியில் 2000 விவசாயிகள் ஒன்று சேர்ந்து நாளை (செப்.22) போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியபோது, "தமிழக - கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும், விவசாய தேவையையும் போக்கி முக்கிய நீராதாரமாக திகழ்ந்து வருகிறது.

அன்வர் பாலசிங்கம் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தை முல்லைப் பெரியாறு அணையுடன் தொடர்புப்படுத்தி கேரள மாநிலத்தில் புதிய அணை கட்ட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளது.

இதன் எதிரொலியாக, கடந்த 15ஆம் தேதி ஓணம் பண்டிகை அன்று கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிப்பெரியாறில் கேரளா மாநில காங்கிரஸ் சார்பில் புதிய அணையை கட்ட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:திருடிச் சென்ற வாகனம் பழுதாகி நின்றதால் பலத்த அடி வாங்கிய பலே திருடன்.. பெரம்பலூரில் ஒரே நாளில் 2 சம்பவம்!

இதற்கு முன்னதாக 2014ஆம் ஆண்டு பேபி அணையை பலப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கேளா அரசின் முட்டுக்கட்டையால் ஆணையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முடியாத நிலையில், அணையை முழுமையாக ஆய்வு செய்ய வல்லுநர்கள் அடங்கிய கமிட்டியை மத்திய நீர்வளத்துறை ஆணையம் அமைத்துள்ளது. இதற்கு தமிழக விவசாய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகக் கூறி அணையின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா அரசியல் கட்சிகள் சார்பில் மக்களிடையே பொய் பிரச்சாரம் செய்து வருவதைக் கண்டித்தும், அணையின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபடும் கேரளா மாநில அரசை கண்டித்தும் தமிழக விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இதற்காக, தமிழக கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்ட குமுளி எல்லைப் பகுதியில் பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நாளை (செப்.22) தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இருந்து 2000 விவசாயிகள் ஒன்று திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று அன்வர் பாலசிங்கம் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details