தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் படிப்பிற்கான 2ஆம் சுற்று கலந்தாய்வு: 1,56,734 இடங்கள் உள்ளதாக அறிவிப்பு..! - Engineering 2nd round Counselling - ENGINEERING 2ND ROUND COUNSELLING

Engineering Counselling: பி.இ., மற்றும் பி.டெக்., பொறியியல் படிப்பில் 2ஆம் சுற்று கலந்தாய்வில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 734 இடங்களில் மாணவர்கள் தாங்கள் விரும்பிய கல்லூரிகளில் பாடப்பிரிவை தேர்வு செய்யலாம் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 2:07 PM IST

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு 2ஆம் சுற்று கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தரவரிசை எண் 26,655 முதல் 1,04,602 வரை மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் சுற்றுக் கலந்தாய்வில் 19,922 மாணவர்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பி.இ., மற்றும் பி.டெக்., படிப்பில் 2,33,376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. அதில் ஒற்றைச் சாளர முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1,79,938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 1,99,868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. பொதுப்பிரிவில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

பி.இ., மற்றும் பி.டெக்., பொறியியல் படிப்பில் பொதுப் பிரிவிற்கான கலந்தாய்வு ஜூலை 29ஆம் தேதி தொடங்கியது. முதல் சுற்று கலந்தாய்வில் 30 ஆயிரத்து 699 மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். முதல் கட்டக் கலந்தாய்விற்கு ஜூலை 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி நிறைவு பெற்றது.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு 19,922 மாணவர்கள் முதல் சுற்று கலந்தாய்வு பொறியியல் படிப்பில் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் சுற்று பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று (ஆக.10) காலை 10 மணிக்கு தொடங்கியது. கட்-ஆஃப் மதிப்பெண் 178.975 முதல் 142 வரை உள்ள 77,948 மாணவர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனை அடுத்து நாளை மறுநாள் (ஆக.12) மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்களுக்கு விருப்பக் கல்லூரிகள் பட்டியலை தேர்வு செய்யலாம். தொடர்ந்து மாணவர்கள் கொடுத்துள்ள விருப்ப பட்டியலின் அடிப்படையில் 13ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இடம் ஒதுக்கீடு செய்யப்படும். அதனை மாணவர்கள் 14ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும்.

இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் கொடுத்த விருப்பத்தின் அடிப்படையில் 15ஆம் தேதி காலை 10 மணிக்கு, இடத்தை உறுதி செய்த மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான சேர்க்கை ஆணையும், UPWARD கொடுத்த மாணவர்களுக்கு அதற்கான படிவமும் அனுப்பப்படும். தொடர்ந்து ஆகஸ்ட் 15 முதல் 20ஆம் தேதி வரை மாணவர்கள் கல்லூரியில் சென்று சேர வேண்டும்.

அதேபோல், பொதுப் பிரிவில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டின்கீழ் தரவரிசை பட்டியலில் 1,344 முதல் 10,837 வரை உள்ள மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களுக்கும் ஆகஸ்ட் 10 முதல் 12ஆம் தேதி வரை விருப்பக் கல்லூரிகளை தேர்வு செய்தல், 13ஆம் தேதி தற்காலிக இட ஒதுக்கீடு செய்யப்படும்.

இதனை அடுத்து ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 10 மணி முதல் 14ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தற்காலிக இடத்தை உறுதி செய்யும் மாணவர்களுக்கு, ஆகஸ்ட் 15ஆம் தேதி இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதன்படி ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பொதுப் பிரிவில் 1,44,713 இடங்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 12,021 இடங்களிலும் என‌ 1,56,734 இடங்கள் உள்ளன எனப் பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான கபடி போட்டி: சாம்பியன் பட்டம் தட்டிச் சென்றது மதுரை அணி!

ABOUT THE AUTHOR

...view details