டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
குடியரசு தலைவரின் பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று (பிப். 5) பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து இன்றைய கூட்டத்தொடர் விவாதத்தில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும் எம்பியுமான டிஆர் பாலு உரை நிகழ்த்தினார்.
அவரது உரையின் போது, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குறித்து வீசிய வார்த்தைகள் தற்போது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய இணையமைச்சர் எல் முருகனிடம், டி.ஆர். பாலு மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் தெரிவித்து வருகின்றனர்.
என்ன நடந்தது விவாதத்தில்..?: காலை 11 மணியளவில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதம் தொடங்கியது. இதில் தமிழக வெள்ள பாதிப்பு குறித்த விவாதம் முன்னிலைப்படுத்தப்பட்டது. அப்போது பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும் எம்பியுமான டி.ஆர்.பாலு, "கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகம் கடும் வெள்ளத்தால் சிக்கித் தவித்தது. தமிழகத்தை மீட்டெடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதியை விரைவாக வழங்க பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய நிதியமைச்சர் மற்றும் குழுக்கள் நேரில் சென்று ஆய்வு செய்தன. அது வரவேற்கத்தக்கது. ஆனால் நிதி இன்றளவும் வழங்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து, வெள்ளத்தின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரயில்களில் சிக்கித் தவித்தனர் என கூறிக் கொண்டிருந்த வேளையில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் தவறான தகவலை பகிர வேண்டாம் என குறிக்கீடு செய்தார்.
இதில் ஆத்திரமடைந்த எம்பி டி.ஆர்.பாலு, "நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், எதற்காக தொடர்ந்து குறிக்கிட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்.. தயவு செய்து உட்காருங்கள் என்று கூறிக் கொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, என்னது இது, ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள், நீங்கள் நாகரீகமாக நடந்து கொள்ள கற்று கொள்ள வேண்டும். நீங்க எம்பியாக இருக்க Unfit, ஏன் அமைச்சராக இருக்கவும் Unfit என பேசினார். இதற்கு அவையில் இருந்த பாஜக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
கொந்தளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் சட்டத்துறை..:டிஆர் பாலுவின் பேச்சுக்கு கொந்தளித்த அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி மற்றும் அர்ஜூன் மேக்வால், "ஒரு பட்டியலின அமைச்சரை எவ்வாறு இப்படி ஒருமையில் சாடலாம். இந்த சாடல் திமுக-வின் நிலைபாட்டை தெளிவாக விவரிக்கிறது. ஒரு இணையமைச்சரை இவ்வாறு கூறுவதற்கான உரிமை எம்பி டிஆர் பாலுவுக்கு இல்லை" என்று அவைக் கூட்டத்திலே கொந்தளிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் எல். முருகன் குறித்து ஒருமையில் பேசிய டி.ஆர்.பாலு அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான் Unfit என்று தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையே சிறிது நேரத்திற்கு பதற்றத்திற்கு உள்ளானது.
இதையும் படிங்க:உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்!