சென்னை: ஏலியன் என்ற ஆங்கில வார்த்தையின் சரியான பொருள் அயலான் என்பது தான். அதாவது நமக்கு, பூமிக்கு சம்பந்தம் இல்லாத அயல் பொருள் என புரிந்து கொள்ளலாம். ஏலியன்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்ற கேள்விக்கு பிறகு வரலாம். அப்படி ஒருவேளை இருந்தால் சினிமாவில் காட்டுவது போன்ற தோற்றத்தில் இருப்பார்களா? என பார்க்கலாம். சினிமாவில் நாம் காண்பது முழுவதும் அந்தந்த இயக்குநர்கள், கலை இயக்குநர்களின் கற்பனையில் உதிக்கும் வடிவம் தான்.
இன்று நாம் பூஜை அறையில் வைத்து வழிபடும் ராமன், கிருஷ்ணன் மகாலட்சுமி, சரஸ்வதி, பிரம்மா, சிவன் என எல்லா உருவங்களும் யாரோ ஒரு ஓவியரால் வரையப்பட்டவை. முக்கிமாக இன்று வழிபடும் பெரும்பாலான உருவங்கள் கேரள ஓவியர் ராஜா ரவிவர்மாவின் தூரிகைகளால் உயிர் பெற்றவை என்று கூட சொல்லலாம். வேதங்களில், புராண கதைகளில் கூறப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு இந்த கடவுளர்களின் உருவங்கள் வரையப்பட்டன. இதே போன்றுதான் சேலத்திலும் ஒருவர் ஏலியனுக்கு கோயில் கட்டி சிலை வைத்திருக்கிறார்.
கடவுளுக்கே இது தான் நிலைமை என்றால் ஏலியன்களை நேரில் பார்த்தது யார்? இதனை பதிவு செய்த அதிகாரப்பூர்வ ஆதாரம் என்ன இருக்கிறது? அப்படியானால் மனிதன் தன்னைப் போன்ற ஒரு உருவத்தை அடிப்படையாகக் கொண்டு , அதிலிருந்து வேறுபடுத்தி ஒரு ஏலியனை தனது கற்பனையில் வடிமைக்கிறான். ஒற்றைக் கண், தலையில் ஆண்டனா எல்லாமே கற்பனை வடிவம் தான்.
யூடியூபிலோ சமூகவலைத்தளங்களிலோ சென்றால் ஏலியன் குறித்த வீடியோக்கள் எண்ணிலடங்காமல் காணக்கிடைக்கின்றன. அமெரிக்க ராணுவ விமானத்தை வழிமறித்த ஏலியன், பறக்கும் தட்டின் வீடியோ என கிராஃபிக்ஸ் உதவியுடன் கிடைக்கும் காட்சிகள் ஏராளம். குறிப்பாக 1950 மற்றும் 60களில் அமெரிக்காவில் பறக்கும் தட்டு என அழைக்கப்படும் பொருட்களை பார்த்ததாக ஏராளமானோர் கூறி வந்தனர்.
இவை எதுவுமே ஏலியன்களுடன் தொடர்புடையவை அல்ல என அண்மையில் போட்டு உடைத்துள்ளது அமெரிக்கா. கடந்த மார்ச் மாதம் பெண்டகன் ராணுவ தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய பொருட்கள் அனைத்துமே அந்நாட்களில் சோதனையில் இருந்த அமெரிக்க உளவு விமானங்கள் என அந்த அறிக்கை கூறுகிறது. ஏலியன்களை எதிர் கொண்டதாக அமெரிக்காவின் எந்த அரசு ஆவணத்திலும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஃபெர்மி பாரடாக்ஸ் (Fermi paradox): 1950களில் நான்கு விஞ்ஞானிகளிடையே நடந்த முரண்பாட்டு உரையாடல் தான் ஃபெர்மி பாரடாக்ஸ் என அழைக்கப்படுகிறது. இயற்பியலாளர் என்ரிகோ ஃபெர்மி சக இயற்பியல் விஞ்ஞானிகளான, எட்வர்டு டெல்லர், ஹர்பர்ட் யார் மற்றும் எமில் கோனோபின்ஸ்கி ஆகியோருடன் மதிய உணவுக்காக நடந்து செல்கையில் உரையாடுகிறார். வேற்றுகிரகவாசிகளின் இருப்பு, ஒளியை விட அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் என அவர்களின் உரையாடல் நீள்கிறது.
கீழ்க்காணும் தர்க்கங்களின் அடிப்படையில் அவர்களின் உரையாடல்கள் நிகழ்கின்றன.
- பால்வெளி அண்டத்தில் சூரியனைப் போன்றே பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. சூரியனிலிருந்து பிரிந்து உயிர்வாழ்வதற்கு ஏற்றதாக பூமி எப்படி உருவானதோ அதே போன்று இந்த நட்சத்திரங்களும் தங்களுக்கென ஒரு பூமியைக் கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது.
- இத்தகை நட்சத்திரங்களில் பெரும்பாலானவை சூரியனை விட பழமையானவை. எனில் பூமியைப் போன்றதொருகிரகம் முன்னமே உருவாகி புத்திசாலித்தனம் மிக்க உயிர்கள் அங்கும் தோன்றியிருக்கலாம்.
- மனிதகுலத்தைக் காட்டிலும் அதிபுத்திசாலித்தனம் பெற்றிருந்தால், நட்சத்திரங்களிடையே பயணிக்கும் தொழில்நுட்பம் அவர்களுக்கு கிடைத்திருக்கலாம் (இதனை மனிதர்கள் இப்போது தான் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கின்றனர்).
- மனிதர்களின் தற்போதைய ஆராய்ச்சி வேகத்தில் எடுத்துக் கொண்டாலும் சில மில்லியன் ஆண்டுகளில் நட்சத்திரங்களைத் தாண்டி பயணிக்கும் தொழில்நுட்பம் கிடைத்துவிடும்.
- சூரியனைக் காட்டிலும் வயதான இந்த நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கலாம்.
- மேற்கொண்ட தர்க்கங்களை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞானிகள் வாதங்களை முன்வைத்தனர்.
- ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும், இந்த ஏலியன்களை யாரும் கண்ணால் பார்த்தற்கான அதிகாரப்பூர்வச் சான்று இதுவரையிலும் இல்லை என்பதே உண்மை.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க:"இனி ஏலியன் தான் காப்பாத்தனும்" சேலத்தில் ஏலியன் சாமிக்கு கோயில் கட்டிய நபரால் பரபரப்பு