கன்னியாகுமரி: இந்திய நாட்டிற்கு மிகவும் நெருக்கமான நட்பு நாடாக மாலத்தீவு இருந்து வந்தது. மாலத்தீவு நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் சீன ஆதரவு கொண்ட ஆட்சியாளர்களின் காரணத்தால் மாலத்தீவு சீன நாட்டிற்கு ஆதரவாக செயல்பட்டது. இந்திய நாட்டின் ராணுவத்தினரை திருப்பி அனுப்பியது தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட காரணத்தினால், இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திடீரென லட்சத்தீவு பகுதிக்கு பயணம் செய்தார்.
அவர் பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வெகுவாக மாலத்தீவிற்கு செல்வதை குறைத்துக் கொண்டனர். லட்சத்தீவு மற்றும் பிற பகுதிகளுக்குச் செல்ல துவங்கினர். இதனால் மாலத்தீவு அரசாங்கம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ள மக்களவைத் தேர்தல் காலகட்டத்தில் தேர்தல் பரப்புரை முடிந்த பின்னர் ,
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு ஆன்மீக பயணமாக வந்து, கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டார். மூன்று நாட்கள் தியானத்தில் இருந்த அவர், ஜூன் 1ஆம் தேதி தனது தியானத்தை முடித்துக் கொண்டார்.
விவேகானந்தர் பாறை: சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுவதும் பயணம் செய்தபோது, 1892ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தென் கோடியில் உள்ள கன்னியாகுமரிக்கு வந்து, பகவதி அம்மன் தவம் செய்ததாக கூறப்படும் பாறையில் தவம் செய்ய விரும்பினார். வாவு துறை கடல் கரையில் இருந்து கடலுக்குள் குதித்து சுவாமி விவேகானந்தர் அலைகளுக்கு இடையே நீந்திச் சென்று அந்த பாறை மீது ஏறி 3 நாட்கள் தவம் செய்தார்.