விழுப்புரம்:ஃபெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 51 செ.மீ மழை பதிவானது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மழையால் பாதிக்கபட்ட மாவட்டங்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவிகளையும், நிவாரண தொகையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
புயல் காரணமாக பெய்த கனமழையினால் தமிழகத்தின் சில நீர்நிலைகள் நிரம்பின. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், சாத்தனூர் அணை நிரம்பியது. 'இதனால் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நள்ளிரவில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதால், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்ட மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்' என பாமக தலைவர் ராமதாஸ் குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டார்.
இந்நிலையில், அணை திறக்கப்பட்டதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு பகுதியில் வெள்ளநீர் புகுந்ததால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வருவதாக கூறப்படுகிறது.