சென்னை: 2024 ஆம் ஆண்டு இன்று நள்ளிரவுடன் முடிந்து புத்தாண்டிற்குள் நாம் அனைவரும் அடியெடுத்து வைக்க உள்ளோம். வருட இறுதி என்பதால் சர்வதேச கோல்ட் கவுன்சிலிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், உலக அளவில் 11 சதவீத தங்கம் இந்தியாவில் உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. குறிப்பாக. இந்தியாவில் ஆபரண தங்கமாக 24 ஆயிரம் டன்னிற்கு மேல் தங்கம் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
40 சதவீத தங்கம் தென்னிந்தியாவில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் பெண்களிடம் 6,720 டன் தங்கம் இருப்பதாகவும் அந்த கவுன்சில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவை விட அதிகம் எனவும் சர்வதேச கோல்ட் கவுன்சிலிங் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், சர்வதேச கோல்ட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார், '' அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா 8,300 டன்னுடன் முதலிடத்திலும், 4,500 டன்னுடன் ஜெர்மனி இரண்டாம் இடத்திலும், இத்தாலி மற்றும் பிரான்ஸ் தலா 3,000 டன்னுடன் 3 மற்றும் 4ஆம் இடத்திலும் உள்ளன.
தங்கம் தொடர்பான கோப்புப்படம் (credit - etv bharat tamil nadu) இந்தியா 9வது இடம்
இந்தியா 830 டன்னுடன் 9வது இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக 700 டன்னுடன் 10வது இடத்தில் இருந்தது. தற்போது அதிக அளவு தங்கம் வாங்கியதால் ஒரு இடம் முன்னேறி தற்போது 9வது இடத்தில் உள்ளது. இவை அனைத்தும் இந்திய அரசிடம் உள்ள அதிகாரப்பூர்வமாக உள்ள தங்க கையிருப்பு ஆகும்.
ஆனால், மக்களிடம் உள்ள தங்கம் 25 ஆயிரம் டன் வரையில் இருக்கும். சர்வதேச அளவில் எல்லா நாடுகளிலும் ஒட்டுமொத்த தங்கத்தை சேர்த்தால் 2 லட்சம் டன் வரை இருக்கும். அதில் 11% இந்திய மக்களிடம் ஆபரண தங்கமாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் இது இன்னும் உயரக்கூடும். இந்தியாவில் ஆதிகாலத்தில் இருந்து தங்கம் இன்றி அமையாத ஒன்றாக மாறிவிட்டது. மக்கள் தங்கத்தில் தான் முதலீடு செய்து வந்துள்ளனர். இனிவரும் காலங்களிலும் தங்கத்தில் தான் முதலீடு செய்வார்கள்.
வியாபாரிகள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் (credit - etv bharat tamil nadu) தங்கத்தில் முதலீடு செய்வதால் பாதுகாப்பாக உள்ளது என கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தற்போது தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதற்கான முதலிடம் அதிகரித்து வருகிறது. ஆனால், பத்திரங்கள் மூலமாக வாங்கப்படும் தங்கத்தின் அளவு இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும், அடுத்த வருடம் டிசம்பருக்குள் ஒரு கிராம் தங்கம் 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் சர்வதேச அளவில் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் அதன் விலையும் உயர்ந்து வருகிறது எனவும் சாந்தகுமார் கூறினார்.
சென்னையின் இன்றைய நிலவரப்படி (டிச.31) ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை (22 கேரட்) 7,110 ரூபாய் ஆகும். அதுவே ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 56,880 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.