சென்னை:டெல்லியில் 2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக நிர்வாகியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் 7 நாட்கள் காவலில் எடுத்து மத்திய போதைப்பொருள் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்களையும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த திருச்சியைச் சேர்ந்த சதானந்தம் என்பவரை சென்னையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை செய்து வந்தனர். இதுவரை இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 5 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களிடம் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாயை எந்தெந்த தொழிலில் முதலீடு செய்துள்ளார்கள்? யாருக்கெல்லாம் கொடுத்துள்ளீர்கள்? இந்த போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் யாரெல்லாம் உள்ளார்கள்? என்பன குறித்து தொடர்ந்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய சென்னை குடோனில் ஆய்வு செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஜாபர் சாதிக்கிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஏழு செல்போன்கள் உள்ளிட்டவைகளைக் கொண்டு அவரிடம் தற்போது விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் ஏழு நாள் காவல் முடிவடைந்த நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும், இன்னும் மூன்று நாட்கள் காவல் நீட்டிக்க வேண்டும் என மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனால் மூன்று நாட்கள் காவல் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்துச் சென்று மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த இருந்தனர்.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் இருந்து விமான மூலம் ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை சென்னை ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியில் உள்ள என்சிபி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜாபர் சாதிக் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் இதில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட இருப்பதாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"ஜாபர் சாதிக் வாயைத் திறந்தால் திமுகவுக்கு அவ்வளவுதான்" - மரண அடி விழும் என்கிறார் ஜெயக்குமார்