மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விமேக்ஸ் கிரிக்கெட் அகாடமி துவக்க விழாவில், சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட 1 அஸ்ட்ரோ டர்ப் விக்கெட் மற்றும் 2 கிரிக்கெட் பிராக்டிஸ் நெட் ஆகியவற்றை, தமிழகத்தை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் நடராஜனும், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனாவும் சேர்ந்து திறந்து வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, நடராஜன் (பவுலீங்) பந்து வீச, காவல் கண்காணிப்பாளர் மீனா பிராக்டிஸ் நெட்டில் பேட்டிங் ஆடினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சர்வதேச கிரிக்கெட் வீரர் நடராஜன், "பள்ளியில் படிக்கும் போது வறுமையின் காரணமாக ஷூ வாங்கக் கூட முடியாத நிலையில், வெறும் கால்களுடனேயே மூன்று வருடங்கள் பயிற்சி செய்தேன். வீட்டில் நல்ல உணவு கூட இருக்காது. பெற்றோர் கூலி வேலை செய்து தான் என்னை வளர்த்தனர்.
நாம் ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் கடுமையாக பயிற்சி பெற்றால், அதை எவரும் ஊக்குவிக்க மாட்டார்கள். எதிர்மறையான எண்ணத்தை மட்டுமே விதைப்பார்கள். அதேதான் எனக்கும் நடந்தது. ஆனால், அன்று அவ்வாறு பேசியவர்கள்கூட, இன்று நான் வெற்றியடைந்த உடன், நான் நிச்சயமாக வளருவேன் என அப்போதே தெரியும் என இப்போது கூறுகின்றனர்.
நீங்கள் எந்த தொழிலை தேர்ந்தெடுத்தாலும், அதில் கடுமையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றி கிட்டும். எனவே, நீங்கள் எப்போதும் மற்றவர்களுக்காக அல்ல, உங்களுக்காக வாழ வேண்டாம். உங்களுக்கு பிடித்த விஷயத்தை நோக்கி பயணப்படுங்கள். இன்றைய தலைமுறையினர், விளையாட்டில் ஆர்வம் செலுத்தாமல் செல்போன் மோகத்தில் தான் உள்ளனர்.
மாணவர்கள் விளையாட்டு, படிப்பு என இரண்டுக்கும் சம முக்கியத்துவம் தர வேண்டும். போதிய படிப்பின்மை காரணமாக நான், மொழி பிரச்னையால் பாதிக்கப்பட்டேன். பள்ளியில் படிக்கும்போது செங்கல் சூளை, கட்டட வேலை, ரோடு போடும் வேலை என பல வேலைகளைச் செய்துள்ளேன். இவற்றை எல்லாம் தடையாக எண்ணக்கூடாது. விளையாட்டுக்கு தடை, நம் மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை எண்ணங்கள் தான்.