சென்னை: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். உடனடியாக தவெக பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த், இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்தார். கட்சியை பிரபலப்படுத்தும் வேலையில் மும்முரமாக விஜய் இறங்கினார். மேலும், கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தவெகவின் அடுத்த கட்ட நகர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், இன்று கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி வைத்து, பாடலையும் வெளியிட்டுள்ளார். தவெக பாடலுக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளதாகவும், பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விஜய் அரசியல் கட்சிக் கொடி எந்த வண்ணத்தில் இருக்கும் என்பது முதல் பல்வேறு கேள்விகள், கட்சிக் கொடி அறிவிப்பு குறித்து தகவல் வெளியானது முதல் எழுந்து வந்தது.
இறுதியாக இன்று தவெக கட்சிக் கொடியை விஜய் வெளியிட்டார். மேல் மற்றும் கீழ் பக்கம் சிகப்பு வண்ணத்திலும், நடுவில் மஞ்சள் வண்ணமும் இடம்பெற்றுள்ளது. மேலும், கொடியின் மஞ்சள் பகுதியில் இரு பக்கமும் போர் யானைகளும், அதன் நடுவே வாகைப்பூவும், அதனைச் சுற்றி நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.
பொதுவாக சிவப்பு நிறம் வேகத்தையும், ஒரு விதமான ஆக்ரோஷ மனநிலையையும் குறிக்கும். மஞ்சள் என்பது அமைதியைக் குறிக்கும். அதேபோல், வாகைப்பூ என்பது போரில் வெற்றி பெற்ற மன்னர்களுக்கு வழங்கப்படுவதாகும். சங்க கால இலக்கியங்கள் புறநானூறு படி, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.