நாமக்கல்:தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே, தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடிவு வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
இத்தகைய சூழலில், தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் மற்றும் அதிக எண்ணிக்கையில் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என தேசிய நெடுஞ்சாலை, மாநகரின் முக்கிய பகுதிகள், மாவட்ட எல்லையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுமட்டும் அல்லாது, அரசியல் பிரமுகர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் பணம் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைக்கும் ரகசியத் தகவலின் அடிப்படையிலும் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நாமக்கல் பரமத்தி சாலையில் தனியார்ப் பள்ளி அருகே நிதி நிறுவன அதிபர் ஒருவரின் வீட்டில் தேர்தல் செலவுகள் மற்றும் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்வதற்காகக் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.