சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அருகில் உள்ள 500 அரசு பள்ளிகளை 2025-26ம் கல்வி ஆண்டில் மேம்படுத்துவதற்கு தனியார் பள்ளிகள் உதவி செய்யும் உள்ளிட்ட பல தீர்மானங்களை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு தனியார் பள்ளி சங்கங்கள் இயங்கி வந்த நிலையில், அதனை ஒருங்கிணைத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவர் அரசகுமார் தலைமையில் நடந்த துவக்க விழாவில், ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், தனியார் பள்ளிகளுக்கான பாதுகாப்பு சட்டத்தை விரைவில் இயற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் தகுதியானவற்றை தேர்வு செய்து நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.
பள்ளி கட்டிடங்களுக்கான வரைப்பட அனுமதி பெறுவதில் உள்ள குளறுபடிகளை அகற்றி 2023 மே 31ஆம் தேதிக்கு முன்னர் கட்டப்பட்ட அனைத்து பள்ளி கட்டடங்களுக்கு சட்ட தளர்வு செய்து கொள்கை முடிவு எடுத்து அனுமதி வழங்க வேண்டும். அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரையில் படிப்பை தொடர நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் போதிய வகுப்பறை வசதி உள்ள பள்ளிக்கு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அனுமதிக்க வேண்டும்.
இந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை நிலுவை இல்லாமல் வழங்க வேண்டும். பெற்றோர்கள் விருப்பதுடன் நடத்தப்படும் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். அரசுப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அரசு விதியின் படி 75 சதவீதம் வருகைப் பதிவேடு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். 2025 - 2026 கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளுக்கு அருகில் உள்ள 500 அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு தனியார் பள்ளிகள் உதவி செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி, "கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பது வெறும் அரசு பள்ளிகளால் மட்டுமல்ல, தனியார் பள்ளிகளின் பங்களிப்பும் உள்ளது. தனியார் பள்ளிகள் சங்கம் ஒன்பது வகையான கோரிக்கைகளை அளித்துள்ளது. அதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதையும் படிங்க: அரசு பள்ளிகளின் இணைய சேவைக்கு 3 கோடியே 26 லட்சம் நிதி; பள்ளிக் கல்வித் துறை
தனியார் பள்ளிகள் புதிய ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன் சமுதாயத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையோடு மிகப் பெரிய பணியைச் செய்து வருகிறது. தனியார் பள்ளிகளின் பங்கின்றி ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க இயலாது. தனியாரின் பங்கு உலகளவில் ஏதேன்ஸ் நகரிலிருந்து துவங்கி செயல்பட்டு வருகிறது. 500 அரசு பள்ளிகளை தத்தெடுத்து பள்ளிக்குத் தேவையான கட்டமைப்புகளை தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்வோம் என்ற தீர்மானத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோடியே 23 லட்சம் மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு அங்கிகாரம் மட்டும் அல்ல தனியார் பள்ளி மாணவர்கள் செய்யும் சாதனைகளையும் அங்கிகரித்து பாராட்டும் அரசாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக மாநாடு வருகின்ற பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது. உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றத் தேவையான சாத்திய கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒன்றிய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்கீடு செய்யாமல் உள்ளது," எனத் தெரிவித்தார்.