சென்னை: சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.63840ஐ தொட்டுள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தை மாதம் திருமண முகூர்த்தம் உள்ளிட்டவை காரணமாக சந்தையில் தேவை அதிகரித்துள்ளது. ஜனவரி 31ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.61,840 ஆக இருந்தது. பிப்ரவரி மாதம் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த பத்து நாட்களில் சவரனுக்கு ரூ.2000 அதிகரித்துள்ளது. சர்வதேச காரணங்கள் விளைவாகவே தங்கம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
![தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/1200-675-22027403-thumbnail-16x9-go_3101newsroom_1738303969_1036_1002newsroom_1739173386_1015.jpg)
இதையும் படிங்க: இரும்பு, அலுமினியம் மீதான இறக்குமதி வரி 25% அதிகரிக்கப்படும்...டொனால்டு டிரம்ப் அடுத்த அதிரடி!
சர்வதேச அளவிலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான இரும்பு, அலுமினியம் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும், இந்த வாரத்தின் இறுதியில் பிற இறக்குமதி வரிகளும் அறிவிக்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இதனால், அமெரிக்காவில் பங்கு வர்த்தகத்தில் கடும் சரிவு ஏற்பட்டது. அதை ஒட்டியே சர்வதேச பங்கு சந்தை நிலவரங்களும் உள்ளன. எனவே, உலக அளவில் முதலீட்டாளர்கள் கவனம் தங்கத்தை நோக்கி திரும்பியுள்ளது. இதனால், தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
சென்னையில் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,980 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ280 அதிகரித்து ரூ.63,840 ஆக இருக்கிறது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் தொடர்ந்து சீரான நிலை நிலவுகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.107 ஆக உள்ளது. கடந்த 4-ம் தேதி வெள்ளி விலை கிராம் ரூ.106 ஆக இருந்தது. அதன் பிறகு கடந்த 6 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இன்றி ரூ.107 ஆக தொடர்கிறது.