தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை எழும்பூர் தாளமுத்து-நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச் சிலை நிறுவப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - THALAMUTHU NATARASAN

மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து - நடராசன் ஆகியோருக்கு திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட தாளமுத்து – நடராசன் மாளிகையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதுப்பிக்கப்பட்ட தாளமுத்து – நடராசன் மாளிகையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (@DIPR Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2025, 3:04 PM IST

சென்னை: தமிழ்மொழி தியாகிகள் நினைவு நாளையொட்டி, சென்னை, மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த திருவாளர்கள் தாளமுத்து – நடராசன் ஆகியோரின் நினைவிடம் ரூ.34 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

1938-ம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சரான மூதறிஞர் இராஜாஜி, தமிழ்நாட்டு மாணவர்கள் இனி இந்தி கட்டாயமாக கற்க வேண்டுமென்று வெளியிட்ட அறிவிப்பினை எதிர்த்து, 27.02.1938 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில், தாய்மொழியை காக்க இந்தி திணிப்பினை எதிர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு அதனடிப்படையில், தந்தை பெரியார், மறைமலை அடிகள், திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதி, பேரறிஞர் அண்ணா போன்ற தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தாய்மொழி காக்க களம் கண்டனர்.

இந்தியைத் திணிக்க முயன்றோருக்கும், முயல்வோருக்கும் அச்சத்தை உருவாக்கிவிட்டுச் சென்றுள்ள தோழர்கள் நடராசன் - தாளமுத்து ஆகிய இருவரின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் சென்னை, மூலக்கொத்தளத்தில் தந்தை பெரியாரால் திறந்து வைக்கப்பட்ட நினைவிடம் தற்போது சிறப்பான முறையில் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளான இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்றைய தினம் மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த திருவாளர்கள் தாளமுத்து – நடராசன் மற்றும் மொழிப்போர் தியாகி, சமூகப் போராளி டாக்டர். எஸ். தருமாம்பாள் அம்மையார் ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவியும், அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.

மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர் நீத்த திருவாளர்கள் தாளமுத்து – நடராசன் ஆகிய இருவருக்கும் சென்னை, எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஐட்ரீம் ஆர். மூர்த்தி, சி.வி.எம்.பி. எழிலரசன், எஸ்.சுதர்சனம், ஆர்.டி. சேகர், ஜே.ஜே.எபினேசர், கே.பி.சங்கர், துணை மேயர் மு. மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details