திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதனை பயன்படுத்தி வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவுநீரை, பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல், பாலாற்றில் திறந்துவிட்டுள்ளன.
இதனால் ஆம்பூரை அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாற்றின் தரைப்பாலத்தின் கீழ் பாலாற்று நீர் மலை பனிபோல் நுரை பொங்கி ஓடுகிறது. பாலாற்றில் தோல் கழிவுநீர் கலக்கப்படுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் பாலாற்றை கண்டும் காணாமல் செல்வதாக பாலாற்று படுகையில் உள்ள விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.