திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே காரம்பாடு கிராமத்தில் உள்ள ஓடைக்கரை சுடலைமாடசாமி கோயில் கொடை விழா நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெற்றது. இவ்விழாவில் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஒரு பிரிவைச் சேர்ந்த இளைஞர் கத்தியால் மற்றொரு பிரிவை சேர்ந்த மதிராஜா, மதியழகன் என்ற அண்ணன், தம்பியை குத்தி கொலை செய்துள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு சகோதரர் மகேஷ்வரன் படுகாயம் அடைந்த நிலையில், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திசையன்விளை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது உயிரிழந்த மதிராஜா மற்றும் மதியழகன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய பருன் (வயது 27), ராஜ்குமார் (28), விபின் (27) ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், இக்கொலை குறித்து கொலை நடைபெற்ற இடம், கொடை விழா குழுவினர் வசிக்கும் திசையன்விளை, கக்கன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இருகுடும்பத்தினர் இடையே முன்பகையும், கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட பிரச்சனையும் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக தெரிகிறது. அதனால், கொலை குறித்து கொலை நடைபெற்ற இடம் மற்றும் கொடை விழா குழுவினர் வசிக்கும் திசையன்விளை கக்கன் நகர் பகுதிகளில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.