தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு! - Drug smuggling in Chennai - DRUG SMUGGLING IN CHENNAI

Drugs Sales Case: சென்னை திருவொற்றியூர் அருகே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறையும், ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

File Image
கோப்புப்படம் (Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 10:15 PM IST

சென்னை: திருவொற்றியூர் காலடிப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சிலர் ஐஸ் என்ற மெத்தபெட்டமின் போதைப்பொருளை விற்பனைக்காக கடத்துவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி தகவல் கிடைத்தது.

இத்தகவலின் அடிப்படையில், காலடிப்பேட்டை பேருந்து நிலையத்திற்குச் சென்ற போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், அங்கே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த எர்ணாவூர் குப்பத்தைச் சேர்ந்த ரகுமான், திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்த சாகுல் அமீது, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அக்பர் பாஷா ஆகியோரிடம் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், ரகுமானிடம் 60 கிராம் ஐஸ் என்ற மெத்தபெட்டமினும், சாகுல் அமீதிடம் 60 கிராம் மெத்தபெட்டமினும், அக்பர் பாஷாவிடம் 12 கிராம் மெத்தபெட்டமினும் பாலிதீன் கவரில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மூன்று பேரிடமும் இருந்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டதால் ரகுமான், சாகுல் அமீது ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், அக்பர் பாஷாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் அவதூறு வழக்கு; உறவினருக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

ABOUT THE AUTHOR

...view details