தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இம்மானுவேல் சேகரன் மணிமண்டபம்: அரசுக் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது! - IMMANUEL SEKARAN MEMORIAL HALL

ராமநாதபுரம் பரமகுடியில், இம்மானுவேல் சேகரனின் மணிமண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு - கோப்புப் படம்
உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு - கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 2:25 PM IST

மதுரை: ராமநாதபுரம் பரமகுடியில், இம்மானுவேல் சேகரனின் மணி மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

கமுதியைச் சேர்ந்த குணசேகரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த ஆண்டு 2023 தமிழ்நாடு முதலமைச்சர், இம்மானுவேல் சேகரனின் சிலையுடன் மணிமண்டபம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதற்காக 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது."

"மணிமண்டபம் கட்ட தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடம் பரமக்குடி பொதுமக்களுக்கான வார சந்தை நடத்தும் இடம். இம்மானுவேல் சேகரன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல. அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் உரிமைக்காக போராடிய தலைவர். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக மட்டுமே, பொது பணத்தை பயன்படுத்த வேண்டும்."

இதையும் படிங்க
  1. காதலர்கள் முத்தம் கொடுப்பதை பாலியல் குற்றமாக கருத முடியாது - நீதிமன்றம் தீர்ப்பு!
  2. “சீமான், சாட்டை துரைமுருகனால் என் உயிருக்கு ஆபத்து” - திருச்சி சூர்யா மனு!
  3. சட்ட விரோத குவாரிகள்; “போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலையை இழக்க நேரிடும்” - நீதிமன்றம் எச்சரிக்கை!

"ஆகவே இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை கையகப்படுத்த இடைக்கால தடை விதிப்பதோடு, பொதுமக்கள் பணத்தில் இம்மானுவேல் சேகரனின் மணி மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்," எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்ததது. அரசு தரப்பில், "உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற்று கட்டுமானம் நடந்து வருகிறது. கட்டுமான பணிகள் 90 விழுக்காடு முடிவடைந்து விட்டது. மாநில அரசு கொள்கை முடிவு எடுத்து பணிகள் நடந்து வருகிறது," என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மணிமண்டபம் பணிகளை முடித்து, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையையை டிசம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details