சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச காலணி மற்றும் காலேந்திகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் விலையில்லா நலத்திட்டங்கள் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலணிகளும் (Footwear) மற்றும் 6 முதல் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலேந்திகளும் (Shoes) வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், விநியோகிக்கப்படும் காலணிகள் மற்றும் காலேந்திகள் மாணவர்களின் கால்களுக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் அளவெடுப்பதற்காக, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்கள், பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று காலணிகளை அளவீடு செய்து வருகின்றனர். கால் பாத அளவீடுகளை சென்டிமீட்டரில் (cm) எடுத்து, தன்னார்வலர்கள் தங்களுடைய ITK செயலியின் மூலம் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் கால் பாத அளவீடு செய்து பதிவேற்றம் செய்துள்ளனர். இப்பணியினை மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு, மாணவர் ஒருவருக்கு அளவீடு செய்ய ரூ.2 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:“போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகமே காரணம்” - மாற்றுத்திறனாளி இளைஞர் ஸ்ரீகாந்த்!