சென்னை:டெல்லியில் நடைபெறும்விளையாட்டு தொழில்நுட்பத்திற்கான ஸ்டாட் அப் மாநாடு விளையாட்டுத் துறையில் ‘ஆத்மநிர்பர் பாரத்’- க்கான உள்நாட்டு மயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை அதிகரிப்பதை இம்மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் விளையாட்டுகளை மேம்படுத்த அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் விளையாட்டுத் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகளுக்கான பணிகளும் திட்டங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
2036-ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் இந்திய அரசின் முன்முயற்சிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் முயற்சிகளுக்கு சென்னை ஐஐடி செஸ்ஸா ஆதரவை வழங்குகிறது. ஐஐடி மெட்ராஸின் உயர்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையம் (Center of Excellence in Sports Science and Analytics - CESSA) மூலம் வழிநடத்தப்படும் இந்த இரண்டு நாள் மாநாடு, இறுதிப் பட்டியலிடப்பட்ட விளையாட்டுத் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களுக்கு முதலீட்டு ஆதரவை வழங்கி, விளையாட்டுத் துறையில் டீப்டெக் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும்.
கிரிக்கெட் பயிற்சி அமர்வுகளை மேம்படுத்தும் வகையில் தனித்துவமான பயன்பாடுகள், இந்தியாவுக்கான தடகள மேலாண்மை அமைப்பு, தனித்துவமான விளையாட்டு கற்றல் தளம், தொகுதி உருவாக்கம் போன்றவை தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் தங்கள் வணிக மாதிரியை சிறந்த நடுவர் குழுவின் முன்பு சமர்ப்பிப்பார்கள். இறுதிப் பட்டியலிடப்பட்ட ஸ்டார்ட்அப்களுக்கு ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் நிதியுதவி வழங்கி தொழில் ஊக்குவிப்பு பணிகளுக்கு ஆதரவு அளிக்கும்.
இந்தியாவில் இருந்து புதுமையான சிந்தனைகளுடன் கூடிய குறைந்தபட்சம் 200 விளையாட்டு தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களை அடைவதற்கான உந்துதலை அடுத்த ஐந்து ஆண்டுகளில் சென்னை ஐஐடி வழிநடத்தும். இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசும்போது, விளையாட்டுகளில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத்தை ஒன்றிணைக்க உறுதிபூண்டுள்ளது.
விளையாட்டு தொழில்நுட்பத்திற்கான சந்தை குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்திய விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் உடல்நிலையை கண்காணிப்பது முதல் அந்தந்த விளையாட்டுகளில் முன்னேற்றத்தை கண்காணிப்பது வரை உள்நாட்டு தயாரிப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. விளையாட்டுக்கான இம்மாநாடு தனது நோக்கங்களை பூர்த்தி செய்ய மற்றொரு முயற்சியாகும் எனத் தெரிவித்தார்.
சென்னை ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள், ஐஐடி மெட்ராஸ் செஸ்ஸா தலைவர்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா கூறும்போது, டெல்லியில் நடைபெறும் இம்மாநாடு விளையாட்டுத் துறையில் புதுமைகளை வளர்ப்பதற்கான முக்கிய தளமாக செயல்படுகிறது. தொலைநோக்குப் பார்வை கொண்ட ஸ்டார்ட் அப்களை ஒன்றிணைத்து, முக்கிய ஆதரவை வழங்குவதன் மூலம், இந்தியாவில் விளையாட்டு தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.