ஐஐடி இயக்குனர் காமகோடி அளித்த சிறப்பு பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) சென்னை:சென்னை ஐஐடியில் படித்த முன்னாள் மாணவர்கள், நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் 2023-24ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் 513 கோடி ரூபாய் நிதியை அளித்துள்ளதாகவும், இதன் மூலம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் எனவும், வரும் ஆண்டில் அதிகளவில் நிதியைப் பெறவும் முயற்சிப்பதாக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
2023-24ஆம் நிதியாண்டில் முன்னாள் மாணவர்கள், தொழில்துறையினர், தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்து 513 கோடி ரூபாய் நிதியும், முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் கூட்டாளர்களிடம் இருந்து 2023-24ஆம் நிதியாண்டில் 717 கோடி ரூபாய் நிதியுதவிக்கான உறுதிமொழியையும் பெற்றுள்ளது.
தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகவும், சமூக தேவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் தொழில்நுட்பத்தை ஈடுபடுத்துவதற்காகவும், தற்போது திரட்டப்பட்டுள்ள நிதி பயன்படுத்தப்படும். இது தவிர, தகுதியான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கும், இக்கல்வி நிறுவனத்தின் வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு தேவைகளுக்கு ஆதரவு அளிப்பதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
நடப்பாண்டில் புதிய முயற்சியாக விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு திரட்டப்பட்ட நன்கொடைகளில் இருந்து அவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இது குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கூறும்போது, “2023-24ஆம் நிதியாண்டில் முன்னாள் மாணவர்கள், தொழில்துறையினர், தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்து 513 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.
இது தவிர முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் கூட்டாளர்களிடம் இருந்து 2023-24ஆம் நிதியாண்டில் 717 கோடி ரூபாய் நிதியுதவிக்கான புதிய உறுதிமொழிகளையும் இக்கல்வி நிறுவனம் ஈர்த்துள்ளது. நிறுவனங்கள் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. தற்போது திரட்டப்பட்டுள்ள 513 கோடி ரூபாயானது, முந்தைய நிதியாண்டான 2022-23-இல் திரட்டப்பட்ட 218 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், 135 சதவீதம் அதிகமாகும்.
முன்னாள் மாணவர்களிடம் இருந்தும், தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்தும், இந்திய மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் பொறுப்புணர்வு நிதியில் இருந்தும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. நாங்கள் பெறும் தொகைக்கான கணக்கை தெரிவித்து வருகிறோம். இதனால் மாணவர்கள் உதவி செய்து வருகின்றனர். சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் சிறந்த முன்னாள் மாணவருக்கான விருது பெற்ற சுனில் வாத்வானி மிகச் சிறந்த பங்களிப்பாக 110 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இதன் மூலம் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான பிரத்யேக பள்ளி ஒன்றை நிறுவும் ஐஐடி மெட்ராஸின் கனவு நனவாக்க உந்துசக்தியாக இருந்தது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், நடப்பாண்டு முதல் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
சிறந்த முன்னாள் மாணவர் விருது பெற்ற வெங்கட் ரங்கனின் நிதியுதவியுடன் ஜெய்ஸ்ரீ மற்றும் வெங்கட் காற்றாலை எரிசக்தி மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள், பொறியியலாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் போன்றவர்களை ஒன்றிணைந்து காற்றாலை எரிசக்தி தொழில்நுட்பம் தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளை முன்னெடுப்பர். அதிநவீன ஆராய்ச்சியின் மூலம் இந்த மையம் இந்திய மக்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப புதுமையான நீரிழிவு சிகிச்சையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
உலகெங்கும் உள்ள நோயாளிகளுக்கு பயனளிக்கும் திறன் கொண்டதாக சங்கர் நீரிழிவு ஆராய்ச்சிக்கான சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது. மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இளங்கலை உடற்கூறியல் ஆய்வகம், நிலையான சப்ளை செயின்களுக்கான பெடக்ஸ் மையம் போன்றவை செயல்பட்டு வருகிறது. கடந்த நிதி ஆண்டில் ஆயிரத்து 72 நன்கொடையாளர்கள் ஐஐடிக்கு கிடைத்துள்ளனர்.
112 பேர் பெரு நிறுவனத்தின் பங்குதாரர்கள். 960 பேர் ஐஐடி முன்னாள் மாணவர்கள் ஆவார். மேலும், மத்திய அரசு சென்னை ஐஐடிக்கு அளிக்கும் 900 கோடி ரூபாய் நிதியில் 60 சதவீதம் சம்பளம் ஒய்வூதியப் பலன்களுக்கு செலவாகிறது. மீதமுள்ள தொகையில் கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிக்கு செலவிடப்படுகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:மாணவர்களுக்கு ரூ.1,000.. வரும் கல்வியாண்டு முதல் தமிழ் புதல்வன் திட்டம் - சிவ்தாஸ் மீனா தகவல்! - Tamil Pudhalvan Scheme